உலகத் தரத்தில் இந்தியப் பல்கலைக் கழகங்களைத் தரம் உயர்த்தும் வகையில், ரூ. 1,000 கோடி மேம்பாட்டு நிதியுதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. சென்னைப் பல்கலைக் கழகம் இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது .
உலக அளவில் வெளியிடப்படும் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் முதல் 200 இடங்களில் பல ஆண்டுகளாக, இந்திய கல்வி நிறுவனங்கள் ஒன்றுகூட இடம்பெற முடியவில்லை.
இந்த நிலையை மாற்றும் வகையில், பல்வேறு திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 'மேம்பட்ட கல்வி நிறுவனம்' என்றத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, 10 அரசு உயர் கல்வி நிறுவனங்கள், 10 தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் என நாடு முழுவதும் 20 கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவை உலகத் தரத்திலான கல்வி நிறுவனங்களாக மாற்றப்படும். அதற்காக, தேர்வு செய்யப்படும் 20 கல்வி நிறுவனங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.200 கோடி வீதம், 5 ஆண்டுகளுக்கு தலா ரூ. 1,000 கோடி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு வழங்க உள்ளது.
இந்தத் திட்டத்துக்கு, தமிழகத்திலிருந்து சென்னைப் பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் கோவை பாரதியார் பல்கலைக் கழகம் ஆகிய மூன்று பல்கலைக் கழகங்களும் விண்ணப்பிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய உயர்கல்வி நிறுவன (என்.ஐ.ஆர்.எஃப்) தரவரிசை, இதுவரை மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள நிதி பயன்பாட்டு விவரங்கள், மத்திய அரசின் ஆராய்ச்சி நிதியுதவிகளைப் பெற்றிருக்கும் பேராசிரியர்களின் எண்ணிக்கை, ஆராய்ச்சிக் கட்டுரை வெளியீடு விவரங்கள், கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் பணியிடங்கள் முழுமை பெற்றிருக்கிறதா என்பன உள்ளிட்ட பல்வேறு அளவீடுகளின் அடிப்படையிலேயே, மத்திய அரசின் இந்த ரூ. 1,000 கோடி நிதியுதவித் திட்டத்துக்கு கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும்.
குறிப்பாக தேசிய உயர்கல்வி தரவரிசைப் பட்டியலில் முதல் 20 இடங்களைப் பிடித்த நிறுவனங்களே, இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வாக அதிக வாய்ப்பு உள்ளது.
2017-ஆம் ஆண்டுக்கான தேசிய உயர்கல்வி நிறுவனங்கள் (பல்கலைக் கழகங்கள்) பட்டியலில் சென்னைப் பல்கலைக் கழகம் 41-ஆவது இடத்தையே பிடித்தது. அதுமட்டுமின்றி, இதுவரை பல்கலைக் கழகத்துக்கு அளிக்கப்பட்ட மத்திய அரசின் ஆற்றல்சார் பல்கலைக் கழகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதி மற்றும் பல்கலைக் கழகத்தின் நேனோ தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு வழங்கப்பட்ட ரூ. 100 கோடி நிதி ஆகியவை எப்படி பயன்படுத்தப்பட்டன என்பதற்கான பயன்பாட்டுச் சான்றிதழை பல்கலைக் கழகம் இதுவரை முறையாகச் சமர்ப்பிக்கவில்லை.
மேலும், தேசிய ஆராய்ச்சி நிதியுதவி (எஃப்.என்.ஏ.), பத்நகர் விருது உள்ளிட்ட மத்திய அரசின் ஆராய்ச்சி நிதியுதவிகளைப் பெறும் பேராசிரியர்களின் எண்ணிக்கையும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் குறைவாக உள்ளது. ஆராய்ச்சி கட்டுரை வெளியீட்டிலும் பல்கலைக் கழகத்தின் நிலை மோசமாக உள்ளது. அதுபோல, ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக துணைவேந்தரே இல்லாமல் இயங்கி வரும் அண்ணா பல்கலைக் கழகமும், பல்வேறு நிபந்தனைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை.
பல ஆண்டுகளாக நிரப்பப்படாத 50 சதவீத ஆசிரியர் பணியிடங்கள்
சென்னைப் பல்கலைக்கழகத்தில் 70-க்கும் அதிகமான துறைகள் உள்ளன. இவற்றில் 94 பேராசிரியர் பணியிடங்கள், 129 இணைப் பேராசிரியர்கள், 284 உதவிப் பேராசிரியர்கள் என மொத்தம் 507 ஆசிரியர் பணியிடங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 50 சதவீத இடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை.
குறிப்பாக தாவரவியல், விலங்கியல், கணிதம், வரலாறு உள்ளிட்ட துறைகளில் பாதிக்கும் குறைவான ஆசிரியர் பணியிடங்களே நிரப்பப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக அனைத்துத் துறைகளிலும் 15 பேராசிரியர் பணியிடங்கள், 40 இணைப் பேராசிரியர் பணியிடங்கள், 130 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் துரைசாமி கூறியது: மத்திய அரசின் ஆற்றல்சார் பல்கலைக்கழகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதி மற்றும் பல்கலைக் கழகத்தின் நேனோ தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு வழங்கப்பட்ட நிதிகள் எப்படி பயன்படுத்தப்பட்டன என்பதற்கான பயன்பாட்டுச் சான்றிதழ்கள் பல்கலைக் கழகம் சார்பில் அனுப்பப்பட்டுவிட்டன.
பல்கலைக்கழகத்தில் அதிக அளவில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் இருப்பது உண்மைதான்.
இதுபோல, மத்திய அரசு பல்கலைக் கழகங்கள் பலவற்றில் 40 சதவீதத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகத்தான் இருக்கின்றன.
தேசிய உயர் கல்வி தரவரிசைப் பட்டியலில் சென்னைப் பல்கலைக் கழகம் 41 ஆவது இடத்தைப் பிடித்ததற்கு, அன்றைக்கு இருந்த ஒருசில பின்னடைவுகளே காரணம். இந்தப் பின்னடைவுகள் அனைத்தையும் படிப்படியாக சரிசெய்யும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அண்ணாமலைப் பல்கலைக் கழக கூடுதல் பேராசிரியர்களுக்கு தீர்வு காணப்படும் வரை, புதிதாக ஆசிரியர் பணியிடத் தேர்வு மேற்கொள்ளக்கூடாது என அரசு சார்பில் உத்தரவிடப்பட்டிருக்கிறது. விதிகளுக்கு உள்பட்டே பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்

‘டெக்’ துணுக்குகள்..

சென்னை: 16 தொகுதிகளில் 24.21 லட்சம் போ் வாக்களிப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


