'விவேகம்' திரைப்பட விநியோகஸ்தர் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே 'விவேகம்' திரைப்பட விநியோகஸ்தர் வீட்டில் வருமான வரித் துறையினர் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே 'விவேகம்' திரைப்பட விநியோகஸ்தர் வீட்டில் வருமான வரித் துறையினர் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.
வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.கே. வெங்கடாசலம். இவர், திருச்சி பகுதிக்கான திரைப்பட விநியோகஸ்தராக உள்ளார். இவர், சமீபத்தில் வெளியான விவேகம் திரைப்படத்தை ரூ. 6.25 கோடிக்கு பெற்று திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதி திரையரங்குகளுக்கு விநியோகித்ததாகக் கூறப்படுகிறது. விவேகம் எதிர்பார்த்த அளவில் ஓடாததால் வசூல் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திரைப்பட விநியோகஸ்தரான வெங்கடாசலம் வீட்டில் வருமான வரித் துறையினர் வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு தொடங்கி சோதனை மேற்கொண்டனர். திருச்சியைச் சேர்ந்த பெண் ஆய்வாளர் ஒருவர் உள்பட 4 அலுவலர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம், தோப்புத்துறை வங்கிகளுக்கு நேரில் சென்ற வருமான வரித் துறை அலுவலர்கள், திரைப்பட விநியோகத்துக்கான பணப் பரிமாற்றங்கள் குறித்து வங்கிக் கணக்குகளை தணிக்கை செய்ததாகத் தெரிகிறது.
கொட்டகையில் சோதனை: திரைப்பட விநியோகஸ்தர் வெங்கடாசலத்தின் வீட்டில் ஆவணங்களை கைப்பற்றிய வருமான வரித் துறையினர், வீட்டுக்கு பக்கவாட்டில் வாகனங்கள் நிறுத்தும் கொட்டகையில் வைத்து அவருடன் சோதனை நடத்தினர்.
நெருக்கமா? : திரைப்பட விநியோகஸ்தரின் மகள் மன்னார்குடியில் உள்ள செங்கமலத்தாயார் கல்லூரியில் படித்து வருவது தொடர்பாகவும், மன்னார்குடியில் உள்ள சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த தினகரன், திவாகரன் போன்றோரிடையே வெங்கடாசலத்துக்கு உள்ள நெருக்கம் தொடர்பாகவும், வீட்டில் மாட்டப்பட்டிருந்த சசிகலா படம் உள்ள நாள்காட்டி போன்றவை குறித்தும் விசாரணையின்போது கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.
திரைப்பட விநியோகஸ்தர் பெயரில் நடந்துள்ள ரூ. 6 கோடிக்கும் மேலான பணப் பரிமாற்றத்தில் சசிகலாவின் குடும்ப உறுப்பினர்களது உதவி இருந்தனவா என்பதைக் கண்டறியும் நோக்கமும் சோதனையில் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com