

பேரறிவாளனை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெரிந்தும் அவரை அந்த வழக்கில் சிக்க வைத்ததாக அவ்வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகளில் ஒருவரான தியாகராஜன் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விவரங்களை சில ஆண்டுகளுக்கு முன்பே ஊடகங்களிடம் தியாகராஜன் தெரிவித்தார் என்றாலும், இப்போது உச்சநீதிமன்றத்தில் இவற்றை மனுவாகத் தாக்கல் செய்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
ராஜீவ்காந்தியைக் கொல்வதற்கான வெடிகுண்டைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளை பேரறிவாளன் வாங்கிக் கொடுத்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. தடா சட்டப்படி இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதால் விசாரணை அதிகாரியிடம் அளிக்கப்படும் வாக்குமூலம் நீதிபதி முன்னிலையில் அளிக்கப்பட்ட வாக்குமூலத்துக்கு இணையானதாகக் கருதப்படும் என்பதாலும் பேரறிவாளன்தான் வெடிகுண்டைத் தயாரிக்க உதவினார் என்று நம்பும் வகையில் தியாகராஜன் வாக்குமூலம் தயாரித்திருந்ததாலும் அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் பேரறிவாளனுக்கு தொடக்கத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
இப்போது அந்த வாக்குமூலமே தவறானது என்பதை அதைப் பதிவு செய்த அதிகாரியே ஒப்புக்கொண்டிருப்பதால் பேரறிவாளன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் தகர்க்கப்பட்டு விட்டன. இதற்குப் பிறகும் பேரறிவாளனை சிறைக் கொட்டடியில் அடைத்து வைக்க முடியாது.
எனவே, அவரை விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்கு முன்பாகவே தமிழக அமைச்சரவை கூடி, அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி பேரறிவாளனை விடுதலை செய்யப் பரிந்துரைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி விடுதலையை விரைவுபடுத்த வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.