நீலகிரி மாவட்டம், முதுமலை அருகே யானைகள் தாக்கி மூன்று கார்கள் புதன்கிழமை சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் 12 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தமிழகத்தில் இருந்து கர்நாடகம், கேரளம் செல்ல இரவு நேரங்களில் தெப்பக்காடு வழியை சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு புதன்கிழமை இரவு வாகனங்கள் தொரப்பள்ளி அருகே சென்றபோது யானைகள் கூட்டம் சாலையைக் கடந்தது. அப்போது வாகனங்களில் சென்ற சிலர் யானைகளை செல்லிடப்பேசி, கேமராக்களில் படம் எடுக்க வாகனங்களை விட்டு இறங்கியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வெளிச்சத்தால் யானைகள் அங்கு நின்றிருந்த மூன்று கார்களை சேதப்படுத்தின. இதில், கோவையைச் சேர்ந்த ரமேஷ், ரஞ்சித் ஆகியோரின் கார்களும், ஈரோட்டைச் சேர்ந்த சுதேவன் என்பவரது காரும் யானைகளால் தாக்கப்பட்டு சேதமடைந்தன.
இதில், காருக்குள் இருந்தவர்களின் அலறலைக் கேட்டு சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர், பட்டாசு வெடித்து யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக 12 பேர் உயிர்தப்பினர். பின்னர், சேதமடைந்த மூன்று கார்களும் மசினகுடி காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.