தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தீப்பெட்டி மீது விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படுமா?

பகுதி இயந்திர தீப்பெட்டிக்கான 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி குறைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 3:17 am

தினமணி

பகுதி இயந்திர தீப்பெட்டிக்கான 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி குறைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில்,  கோவில்பட்டி,  எட்டயபுரம்,  கழுகுமலை, கடலையூர்,  விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளிலும்,  திருநெல்வேலி  மாவட்டத்தில் திருவேங்கடம்,  குருவிகுளம்,  சங்கரன்கோவில் பகுதிகளிலும், விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர்,  சிவகாசி,  ஏழாயிரம்பண்ணை,  திருத்தங்கல், விருதுநகர்,  தாயில்பட்டி போன்ற பகுதிகளிலும்,  வேலூர் மாவட்டம் குடியாத்தம்  உள்ளிட்டப் பகுதிகளிலும் தீப்பெட்டி உற்பத்தி பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

தமிழகத்தில் 10 முழு இயந்திர தீப்பெட்டி நிறுவனங்கள்,  300 பகுதி இயந்திர தீப்பெட்டி நிறுவனங்கள்,  2ஆயிரத்துக்கும் மேற்பட்ட கையினால் செய்யும் தீப்பெட்டி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியை முழு இயந்திரம் மற்றும் பகுதி இயந்திர தீப்பெட்டிக்கும் ஒரே அளவாக நிர்ணயம் செய்தது. கையினால் செய்யும் தீப்பெட்டிக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.
தற்போது,  தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான அட்டை,  குச்சி,  மெழுகு,  பேப்பர்,  குளோரேட் போன்ற மூலப் பொருள்களின் விலை உயர்வு,  லாரி வாடகை உயர்வு,  கூலி உயர்வு போன்ற காரணங்களால் தீப்பெட்டியின் உற்பத்தி செலவு கூடுகிறது.

பகுதி இயந்திர தீப்பெட்டிக்கு கூலியாட்கள் மற்றும் உற்பத்தி செலவு அதிகம். ஆனால் பகுதி இயந்திர தீப்பெட்டிக்கும்,  முழு இயந்திர தீப்பெட்டிக்கும் ஒரே சீராக 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியை அரசு  நிர்ணயம் செய்தது,  தீப்பெட்டி ஆலைகளுக்கு ஏமாற்றத்தை அளித்தது.  அண்மையில் 200-க்கும் மேற்பட்ட பொருள்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு குறைத்தபோதும்,  தீப்பெட்டி மீது விதிக்கப்பட்டிருந்த வரியில் எவ்வித மாற்றமும் இல்லை.

இந்நிலையில், பகுதி இயந்திர தீப்பெட்டி மீது விதிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரியை உடனடியாக குறைக்க வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கச் செயலர் சேதுரத்தினம் கூறியது: தீப்பெட்டித் தொழிலை நம்பி நேரடியாக 5 லட்சம் பேரும்,  மறைமுகமாக 2 லட்சம் பேரும்,  அதை சார்ந்த தொழிலில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுதொழில் பட்டியல் இருந்து தீப்பெட்டித் தொழில் நீக்கப்பட்டது. இதனால் பெரும் சரிவுக்கு சென்ற இத்தொழிலைப் பாதுகாக்க தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் போராடி வந்த நிலையில்,  தீப்பெட்டித் தொழிலுக்கு 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டதால் தொழில் முற்றிலுமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வரியை குறைக்க வலியுறுத்தி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.

எனவே,  பகுதி இயந்திர தீப்பெட்டி மீது விதிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரியைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.