தூத்துக்குடியில் இருந்து 80 டன் சரக்குகளை ஏற்றிக் கொண்டு 7 மீனவர்களுடன் மாலத்தீவு சென்ற சிறிய ரக கப்பல் மாயமானதால் மீனவர்களின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
தூத்துக்குடி பாத்திமாநகர் 5 ஆவது தெருவைச் சேர்ந்தவர் அமலா. இவருக்குச் சொந்தமான சிறிய ரக கப்பல் தூத்துக்குடி- மாலத்தீவு இடையே பொருள்களை ஏற்றிச் செல்லும் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த கப்பல் கடந்த 14 ஆம் தேதி உணவுப் பொருள்கள், தர்பூசணி, பஞ்சு மெத்தை என மொத்தம் 81 டன் சரக்குகளுடன் மாலத்தீவு தலைநகர் மாலிக்கு புறப்பட்டுச் சென்றது.
கப்பலில் பாத்திமாநகரைச் சேர்ந்த ரஞ்சித், ஜான்சன், அந்தோணிசாமி, ராஜா, பிரைட், அன்டோ, போஸ் ஆகிய 7 மீனவர்கள் பணியில் இருந்துள்ளனர். கடந்த 15 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து 10 கடல் மைல் தொலைவில் சென்றபோது தொலைத்தொடர்பு கருவிகள் செயலிழந்ததாகக் கூறப்படுகிறது.
18 ஆம் தேதி மாலத்தீவு தலைநகர் மாலிக்குச் சென்றடைய வேண்டிய கப்பல் உரிய நேரத்தில் செல்லாததால் அங்குள்ளவர்கள் கப்பலின் உரிமையாளர் அமலாவுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மாயமான கப்பலைத் தேடும் பணியில் சக மீனவர்களும், கடலோர காவல் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, கப்பல் உரிமையாளர் அமலா தலைமையில் 7 மீனவர்களின் உறவினர்களும் மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷை வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தனர். மாயமான கப்பல் மற்றும் 7 மீனவர்களின் நிலை குறித்து தேடுதல் பணியைத் துரிதப்படுத்த வேண்டும் என அவர்கள் ஆட்சியரிடம் கூறினர்.
இது தொடர்பாக ஆட்சியர் என். வெங்கடேஷ் கடலோர காவல் படை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தேடும் பணியைத் தீவிரப்படுத்துமாறு வலியுறுத்தினாராம். இதற்கிடையே, மாயமான கப்பலும், 7 மீனவர்களும் இலங்கை மீனவர்களால் மீட்கப்பட்டு அங்கு பத்திரமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதியானால் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக மனு அளித்தவர்கள் தெரிவித்தனர்.