யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நவம்பர் முதல் டிசம்பர் முதல் வாரம் வரை தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம்: மு.க. ஸ்டாலின்

நவம்பர் முதல் டிசம்பர் முதல் வாரம் வரை தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :20 அக்டோபர் 2017, 9:22 am

DIN

நவம்பர் முதல் டிசம்பர் முதல் வாரம் வரை தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், 
இன்று நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. முதல் தீர்மானமாக, டெங்கு பிரச்னையில் பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கவும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதற்கு திமுக தலைமைக் கழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று, ஆங்காங்கே கழக தோழர்கள் சிறப்பான பணிகளில் ஈடுபட்டதை முன்னிட்டு, அவர்களுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டெங்கு பிரச்னையால் இன்றைக்கு கொத்து கொத்தாக பொதுமக்கள் மாண்டு போகும் கொடுமை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை, உடனடியாக மத்திய, மாநில அரசுகள் சுகாதாரப் பேரிடர் என அறிவித்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்ற தீர்மானம் இரண்டாவதாக நிறைவேற்றப்பட்டது.

மூன்றாவது தீர்மானமாக, மாநில உரிமைகளை தாரை வார்க்கும் ‘குதிரை பேர’ அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நான்காவதாக, அதிமுக ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊழல்கள் மீதான கிரிமினல் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க முடியாது என்ற தீர்மானமும், வாக்காளர் பட்டியலை சரிபார்க்கின்ற பணிகளில் கழகத்தினர் ஈடுபட வேண்டும் என்ற தீர்மானம் ஐந்தாவதாகவும், ஆறாவது தீர்மானமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்தி, பொதுமக்களை பாதிக்கும் அடிப்படை சுகாதார சீர்கேடுகளை களைய வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானங்கள் மீதான தங்களுடைய கருத்துகளை மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டத்தில் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, எதிர்வரும் நவம்பர் முதல் வாரத்தில், கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக நான் முன்னின்று நடத்திய ‘நமக்கு நாமே’ பயணத்தைப் போலவே, ஒரு எழுச்சிப் பயணத்தை நடத்திட திட்டமிட்டு இருக்கிறோம். அந்தப் பயணம் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கி, டிசம்பர் முதல் வாரத்தில் முடிவடையும். அந்தப் பயணம் பற்றி மாவட்ட கழக செயலாளர்களுடன் கலந்து பேசியிருக்கிறோம்.

கேள்வி: அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொறுப்பு ஆளுநராக பதவி வகித்த வித்யாசாகர் ராவ் அவர்களிடம் கடிதம் அளித்தது போல மீண்டும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநரை சந்திப்பீர்களா?

பதில்: இதுகுறித்து நாங்கள் நீதிமன்றத்தை கூட நாடியிருக்கிறோம். ஏற்கனவே குட்கா விவகாரம் குறித்து நீதிமன்றத்தை நாடினோம். இப்போது வாக்கி டாக்கி ஊழல் குறித்து புகார் அளித்துள்ளோம். அதுகுறித்து, வழக்கு தொடரவும் இருக்கிறோம். எனவே, இதுபோன்ற சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க இருக்கின்றோம்.

கேள்வி: எந்தத் தேர்தலை மையப்படுத்தி இந்த எழுச்சிப் பயணம் நடைபெறும்?

பதில்: உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தகளுக்காக மட்டுமல்ல, கட்சியின் வளர்ச்சிக்காகவும், இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியின் அலங்கோலங்களை மக்களிடத்தில் எடுத்துச் சொல்வதற்காகவும், ஒரு அடிமை ஆட்சியாக இங்கிருக்கும் ‘குதிரை பேர’ ஆட்சி நடந்துக் கொண்டிருப்பதை மக்களிடத்தில் விளக்கவும் இந்தப் பயணம் தேவைப்படுகிறது, அதனால் நடத்துகிறோம்.

கேள்வி: பயணத் திட்டம் முடிவு செய்யப்பட்டுவிட்டதா?

பதில்: பயணத் திட்டம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதுகுறித்து மாவட்ட செயலாளர்களிடம் கலந்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். இன்னும் நான்கைந்து நாட்களுக்குள் பயணத் திட்டத்தை முடிவு செய்து முறையாக அறிவிப்போம்.

கேள்வி: செப்டம்பர் 18க்குள் உள்ளாட்சித் தேர்தலை அறிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற சொல்லியிருக்கிறதே?

பதில்: குறிப்பிட்ட தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும், அறிவிக்கை வெளியிட வேண்டும் என நீதிமன்றமே கூறியிருக்கிறது. இதுகுறித்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கூட நாங்கள் தொடர்ந்திருக்கிறோம்.

கேள்வி: நாகப்பட்டினத்தில் இன்று காலை பணிமனை இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் பலியாகி இருக்கிறார்களே?

பதில்: நாகை மாவட்டம் பொறையாறில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள ஓய்வறை இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஏற்கனவே அந்த மேற்கூரை பழுதாகியுள்ளது என்று திமுக தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் புகார் கொடுத்தும் இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கெல்லாம் இந்த அரசு தான் பொறுப்பேற்று, பதில் சொல்ல வேண்டும்.

கேள்வி: பாஜகவின் அகில இந்திய பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதர்ராவ், பேரறிஞர் அண்ணா இப்போது இருந்திருந்தால் பாஜகவில் இணைந்திருப்பார் என்று கூறியிருக்கிறாரே?

பதில்: இது அவர் நீண்ட நாட்களுக்கு முன்பு கூறிய கருத்து. இதுகுறித்து ஏற்கனவே பதில் சொல்லியிருக்கிறேன். பேரறிஞர் அண்ணாவை பற்றி பேசும் அளவுக்கு அவர்களது மனம் மாறியிருக்கிறது என்றால் அது உள்ளபடியே வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளையும் அவர்கள் பின்பற்றினார்கள் என்றால் எங்களுக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.