சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசியர் எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த ராஜாராமின் பதவிக் காலம் 2016 மே 26-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. அதன் பிறகு நீண்ட தாமதத்துக்குப் பின்னர் துணைவேந்தர் தேடல் குழு அமைக்கப்பட்டது. பின்னர் அந்தக் குழு ரத்து செய்யப்பட்டு , இரண்டாவது குழு அமைக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் இரண்டாவது குழுவும் ரத்து செய்யப்பட்டது.
பின்னர் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில் மூன்றாவது குழு அமைக்கப்பட்டது. இக்குழு 160-க்கும் மேற்பட்ட பேராசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று, பரிசீலனை செய்து 10 பேர் கொண்ட பட்டியலை மார்ச் 31-இல் ஆளுநர் அலுவலகத்தில் சமர்ப்பித்தது.
3 பேர் கொண்ட இறுதிப் பட்டியலிலிருந்து...இந்த 10 பேரிடம் ஆளுநர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, யுஜிசி முன்னாள் துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ், பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் எம்.கே.சூரப்பா, சென்னை ஐஐடியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் எஸ்.பொன்னுசாமி ஆகிய மூன்று பேர் கொண்ட இறுதிப் பட்டியல் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
நியமன உத்தரவு: இவர்களில் பேராசிரியர் சூரப்பாவை துணைவேந்தராக நியமித்து தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் வியாழக்கிழமை உத்தரவிட்டார். இவர் மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் வகிப்பார் எனவும் ஆளுநரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலோகவியல் பொறியியல் துறை வல்லுநர்: உலோகவியல் பொறியியல் துறை பிஎச்.டி. பட்டதாரியான புதிய துணைவேந்தர் எம்.கே.சூரப்பா, 30 ஆண்டுகள் பேராசிரியர் பணி அனுபவமுடையவர்.
பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி கல்வி நிறுவனத்தில் (ஐஐஎஸ்சி)பேராசிரியராக 24 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு பஞ்சாப் மாநில ரோபார் ஐஐடி இயக்குநராக 2009-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். 150 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ள இவர், ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புக்காக 4 காப்புரிமையையும் பெற்றிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










