டிஜிட்டல் கட்டணம் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிராக வேலைநிறுத்த போரட்டம் நடந்து வரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு தெலுங்கு சினிமா உலகமும் ஆதரவளித்துள்ளது. இதில் குறிப்பிடும்படியாக தெலுங்கு மொழி திரைப்படங்கள் தமிழகத்தில் வெளியாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் நிறுவனங்களின் அதிக கட்டணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மார்ச் 1 -ஆம் தேதியில் இருந்து புதிய படங்களை வெளியிடாமல் தமிழ் திரைப்பட அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன. இதனால் புதிய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் மற்றும் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பிற மொழி படங்கள் வழக்கம்போல் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது.
இதை ஏற்றுக் கொண்ட தெலுங்கு சினிமா அமைப்புகள், வரும் வாரத்திலிருந்து தமிழகத்தில் தெலுங்கு படங்களின் வெளியீட்டை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளன. தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் தெலுங்கு படங்களும் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் திரையிடப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் பேச்சுவார்த்தை: தற்போது நடந்து வரும் தமிழ்த் திரைப்பட பிரச்னைகள் குறித்து இன்னும் ஓரிரு நாள்களில் அரசு முன்னிலையில் பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட தமிழ்த் திரை அமைப்புகள் பங்கேற்கின்றன. இந்த தகவலை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை!







