
சென்னை: பொதுவாழ்க்கையில் இதெல்லாம் இயல்புதான் என்று குட்கா வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை உத்தரவு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் குட்கா மற்றும் போதைப்பாக்குக்கு தடை விதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆன போதிலும், அதன் சட்டவிரோத விற்பனை மட்டும் இன்னும் குறையவில்லை. தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள குட்காவை உற்பத்தி செய்வதையும், விற்பனை செய்வதையும் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோருக்கும் சென்னையில் செயல்பட்டு வந்த குட்கா நிறுவனம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ரூ. 39 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்திருப்பதற்கான ஆதாரங்கள் வருமானவரித்துறை ஆய்வுகளின் போது கைப்பற்றப்பட்டன. இந்த குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதனை அடுத்து தமிழகம் முழுவதும் குட்கா பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்படுவதாக திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் கொண்ட அமர்வு குட்கா முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வியாழனன்று தீர்ப்பளித்துள்ளது.
தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரித்து வந்த நிலையில், குட்கா உற்பத்தி, விற்பனை, சந்தையில் கிடைப்பது என்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பொதுவாழ்க்கையில் இதெல்லாம் இயல்புதான் என்று குட்கா வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை உத்தரவு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வியாழன் அன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுகாதாரத்துறையில் வெளிப்படை தன்மையுடன் பணி நியமனங்கள் நடைபெறுகின்றன. காலிப் பணியிடங்கள் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம்.
குட்கா வழக்கு சிபிஐ விசாரணையைப் பொருத்த வரை, பொதுவாழ்க்கையில் இருப்பவர்களை நோக்கி அவதூறுகள், குற்றச்சாட்டுகள் வருவது இயல்பு. சுருக்கமாகச் சொல்வதனால் மடியில் கனமில்லை; எனவே வழியில் பயம் இல்லை.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.