நிர்வாகப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்லலாம்: ஆலை நிர்வாகத்திற்கு பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி 

நிர்வாகப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்லலாம் என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.
நிர்வாகப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்லலாம்: ஆலை நிர்வாகத்திற்கு பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி 

புது தில்லி: நிர்வாகப் பணிகளுக்காக ஆலைக்குள் செல்லலாம் என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக உரிமையாளர்களான வேதாந்தா நிறுவனம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது என்றும், ஆலையால் மாசு ஏற்படுகிறதா என்பதை ஆராய தனியாக குழு அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த மனுவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதிட்டது.

ஆனால், தமிழக அரசின் வாதத்தை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிராகரித்ததோடு,  ஆலையை திறக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி வேதாந்தா குழுமம் சார்பில் தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

மனு மீதான விசாரணையின் பொழுது காற்று, நீர் மாசு ஏற்படுத்தாத வகையில் ஆலை செயல்படுவதாகவும், விதிகள் மீறப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இதுவரை ஸ்டெர்லைட் ஆலையில் காப்பர் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், ஆலை மூடப்பட்டதால் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து காப்பரை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும் வேதாந்தா குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணையானது வியாழனன்று பசுமைத் தீர்ப்பாயத்தில், அதன் தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் முன்னிலையில் நடைபெற்றது. அப்பொழுது ஆலை நிர்வாகத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டியுள்ளது. அத்துடன் மிக முக்கியமான நிர்வாகக் கோப்புகள் மற்றும் கணிப்பொறிகள் ஆகியவை ஆலையின் வளாகத்தில் உள்ளன. எனவே குறைந்த பட்சமாக 30 நாட்களாவது ஆலை செயல்பட அனுமதிக்க வேண்டு என்று கோரிக்கை வைத்து வாதாடினார்.

ஆனால் அரசுத் தரப்பில் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆலையின் செயல்பாடுகள் மற்றும் விதிமீறல்கள் தொடர்பான முக்கியமான கோப்புகளை அவர்கள் அழித்து விடக் கூடும் என்ற வாதம் முன்வைக்கபட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கோயல் நிர்வாகப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் நிர்வாக அதிகாரிகள் செல்லலாம் என்று அனுமதியளித்து உத்தரவிட்டார். ஆனால் அதே சமயம், கண்டிப்பாக எந்த விதமான உற்பத்தி பணிகளும் நடைபெறக் கூடாது என்றும் அவர் தனது உத்தரவில் தெளிவுபடுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com