ஓசி பிரியாணி கேட்டு தாக்கிய வழக்கு: தேடப்பட்டு வந்த யுவராஜ் நீதிமன்றத்தில் சரண்

சென்னை விருகம்பாக்கத்தில் ஓசி பிரியாணி கேட்டு உணவக ஊழியர்கள் தாக்கப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த யுவராஜ் இன்று(திங்கள்கிழமை) நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
ஓசி பிரியாணி கேட்டு தாக்கிய வழக்கு: தேடப்பட்டு வந்த யுவராஜ் நீதிமன்றத்தில் சரண்
Published on
Updated on
1 min read

சென்னை விருகம்பாக்கத்தில் ஓசி பிரியாணி கேட்டு உணவக ஊழியர்கள் தாக்கப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த யுவராஜ் இன்று(திங்கள்கிழமை) நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஒரு பிரபலமான பிரியாணி கடையில், கடந்த மாதம் 29-ஆம் தேதி இரவு வேலை நேரம் முடிந்த பின்னர் கடையின் காசாளர் பிரகாஷ், கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு கும்பல், பிரகாஷிடம் இலவசமாக பிரியாணி கேட்டு தகராறு செய்தது. தகராறு முற்றவே அந்தக் கும்பல், பிரகாஷையும், அங்கிருந்த ஊழியர்களையும் கடுமையாகத் தாக்கியது.

இது தொடர்பாக அந்த பிரியாணி கடை நிர்வாகம் சார்பில், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் போலீஸார் 6 கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து, அந்த உணவகத்தில் பிரியாணி கேட்டு அந்த கும்பல் தாக்குதல் நடத்திய காட்சி சமூக ஊடகங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டது விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த திமுக கட்சி நிர்வாகிகள் யுவராஜ், திவாகர் தலைமையிலான கும்பல் என்பது தெரியவந்தது. இச்சம்பவத்தில் தொடர்புடைய யுவராஜ், திவாகர் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த வழக்குத் தொடர்பாக, சாலிகிராமம் விட்டலாச்சாரியார் தெருவைச் சேர்ந்த கோ.மணிகண்டன் (23), கிஷோர் (19), கல்லூரி மாணவர் சுரேஷ் (19), பா.சதீஷ்குமார் (23), வெ.ராம்கிஷோர் (23), கே.கே.நகர் விஜயராகவபுரத்தைச் சேர்ந்த நா.கார்த்திக் (22) ஆகிய 6 பேரை போலீஸார் இந்த மாதம் 2-ஆம் தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கின் முக்கிய எதிரிகளான யுவராஜ், திவாகர் ஆகிய இருவரும் தலைமறைவானதால் போலீஸார் அவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், யுவராஜ் சுமார் 20 நாட்களுக்குப் பிறகு இன்று (திங்கள்கிழமை) நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com