காவிரி நதிநீர்ப் பங்கீட்டு ஆணையத்தை மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உடனடியாகக் கூட்டி மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் உரிய தீர்வு காண வேண்டும் எனறு புதுவை முதல்வர் வே. நாராயணசாமி வலியுறுத்தினார்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கர்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கான வரைபடம் தயாரிக்க தமிழகம், புதுவை அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
மேக்கேதாட்டு அணை கட்டக் கூடாது என வலியுறுத்தி, புதுச்சேரி சட்டப்பேரவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் அண்மையில் நான் வழங்கியபோது, காவிரி நதிநீர்ப் பங்கீட்டு ஆணையத்தைக் கூட்டி, சம்பந்தப்பட்ட நீர்வளத்துறைச் செயலாளர்களை அழைத்துப் பேசுவதாக என்னிடம் உறுதியளித்தார். இதனிடையே, மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக, அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் அழைத்து விளக்கவுள்ளதாக செய்தி வந்துள்ளது.
தமிழகம், புதுவை மாநிலங்களுடன் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட இந்த முடிவு என்பது இவ்விரு மாநில விவசாயிகளையும் வஞ்சிக்கும் செயல். ஆகவே, மத்திய நீர்வளத் துறை அமைச்சர், ஏற்கெனவே அளித்த உறுதியின்படி, காவிரி நதிநீர்ப் பங்கீட்டு ஆணையத்தை உடனடியாகக் கூட்ட உத்தரவிட்டு, மாநில பொதுப்பணித் துறைச் செயலாளர்களை அழைத்துப் பேசி உரிய தீர்வு காண வேண்டும். இல்லையெனில், விவசாயிகளின் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடிக்கும். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 8 நாள்களாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது. இதற்கான பொறுப்பை மத்திய அரசும், கர்நாடக மாநில அரசும்தான் ஏற்க வேண்டும்.
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். அவரது கருத்தை இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் அங்கீகரித்துள்ளன. சில அரசியல் கட்சிகளோ இதனை சர்ச்சையாக்கி, கூட்டணியில் குழப்பம் விளைவிக்க நினைக்கின்றன.
ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மதச்சார்பற்ற அணியின் நோக்கம் மத்தியில் உள்ள சர்வாதிகார ஆட்சியை அகற்றுவதுதான். எங்களது அணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்பதைத் தேர்தல் முடிவு வெளியான பிறகு, கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து அறிவிப்போம் எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, இதில் சர்ச்சைக்கு எந்த இடமும் இல்லை.
பிரதமர் மோடி அண்மையில் புதுச்சேரியைச் சேர்ந்த பாஜக தொண்டர்களுடன் காணொலிக் காட்சியில் பேசியபோது, தொண்டர் ஒருவர் கேட்ட ஜிஎஸ்டி தொடர்பான கேள்விக்கு உரிய பதிலளிக்கவில்லை. தனது கட்சித் தொண்டர்களுக்கே பதிலளிக்காத பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு எப்படி பதில் கூறுவார்?
ஐந்து மாநிலத் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி காரணமாக ஜிஎஸ்டி வரியை மாற்றி அமைப்போம் என பாஜக தெரிவித்தது. இப்போதுதான் அந்தக் கட்சிக்கு ஞானோதயம் பிறந்துள்ளது. ராகுல் காந்தி அறிவித்தபடி வருகிற 2019 இல் நாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். மதச்சார்பற்ற அணிகள் ஒருங்கிணைந்து, மத்தியில் ஆட்சி அமைக்கும்.
புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து, துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற ஜனவரி 4 ஆம் தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்பர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அப்பா... மகனே...

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு முதலிடம்..! நியூசிலாந்து வீரரின் சாதனை!
ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க சுங்கக் கட்டணம் இல்லை! ஈரான் உறுதி அளித்ததாக டிரம்ப் பதிவு!

வேளச்சேரி - தாம்பரம் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் ஏன்?
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



