கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. ரத்தம்: மறு ரத்தப் பரிசோதனையில் மேலும் அதிர்ச்சி

எட்டு மாதக் கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவத்தில், மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் அப்பெண்ணுக்கு மறு ரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் சண்முகசுந்தரம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மருத்துவக் குழுவினர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் சண்முகசுந்தரம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மருத்துவக் குழுவினர்.

மதுரை: எட்டு மாதக் கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவத்தில், மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் அப்பெண்ணுக்கு மறு ரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டது.

உயர்மட்ட சிகிச்சைக்காக ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட மறு பரிசோதனையில், அவருக்கு எய்ட்ஸ் மற்றும் மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் (பொறுப்பு) டாக்டர் எஸ். சண்முகசுந்தரம் கூறியுள்ளார்.

பாலிமெராஸ் செயின் ரியாக்ஷன் சோதனையும் அப்பெண்ணுக்கு நடத்தப்பட்டுள்ளது. இதன் முடிவு 48 மணி நேரத்தில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

கர்ப்பிணிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்ட மருத்துவர்கள் குழுவில் தற்போது 9 மருத்துவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். பிறக்கப் போகும் குழந்தைக்கு எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுப்பதற்கான சிகிச்சைகள் தொடங்கப்பட்டுவிட்டன. இவருக்கு ஜனவரி 31ம் தேதி பிரசவம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாகவே ஒரு குழந்தை வயிற்றில் சிசுவாக இருக்கும் போது அதற்கு தாயிடம் இருந்து எய்ட்ஸ் பரவாது. குழந்தை பிறக்கும் போதுதான் ரத்தத்தின் மூலம் எய்ட்ஸ் பரவும் என்று டீன் ஷண்முகசுந்தரம் தெரிவித்தார்.

99 சதவீதம் பிறக்கும் குழந்தைக்கு எய்ட்ஸ் பாதிப்பில்லாமல் பிரசவம் பார்க்க முடியும் என்றும், ஏற்கனவே இதுபோன்ற சிகிச்சைகளை மருத்துவர்கள் கையாண்டுள்ளதாகவும் டீன் தெரிவித்தார்.

சம்பவத்தின் பின்னணி: 
ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணிக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 9 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடலில் வைரஸ் தாக்கத்தை அறிய வியாழக்கிழமை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஹெச்ஐவி தொற்று இருந்த ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணி, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புதன்கிழமை சேர்க்கப்பட்டார். இங்கு பிரசவ சிகிச்சைப் பிரிவில் தனி வார்டில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரை தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை சந்தித்தார். பின்னர் அவர், டீன் சண்முகசுந்தரம், மகப்பேறு சிகிச்சைப் பிரிவுத் தலைவர் சாந்தி தேவி மற்றும் மூத்த மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தி, சிகிச்சை தொடர்பாக அறிவுரைகளை வழங்கினார்.

சிகிச்சைக்கு 9 பேர் கொண்ட குழு: கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மகப்பேறு சிகிச்சைப் பிரிவுத் தலைவர் தலைமையில் 9 துறைகளின் மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மகப்பேறு மற்றும் மகளிர் நலத்துறை, மருந்தியல் துறை, ரத்த வங்கி, ஜீரண நலத்துறை, மனநல மருத்துவம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 9 மருத்துவர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த மருத்துவர்களுடன் டீன் சண்முகசுந்தரம் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். இதில் கர்ப்பிணிக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

வைரஸ் தாக்கத்தை அறிய பரிசோதனை: பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி வைரஸின் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறிய ரத்த மாதிரி வியாழக்கிழமை சேகரிப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அப்பெண்ணுக்கு, வைரஸின் தாக்கத்தைக் குறைக்கவும், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்படாமல் தடுக்கவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.

எய்ட்ஸ் தடுப்பு திட்ட இயக்குநர் ஆய்வு: அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கர்ப்பிணியை, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் கே.செந்தில்ராஜ் வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி வைரஸ் தாக்கத்தைக் குறைப்பதற்கும், குழந்தைக்கு தாக்கம் ஏற்படாமல் தடுப்பதற்குமான சிகிச்சை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போதுமான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

தற்கொலைக்கு முயன்றவருக்கும் சிகிச்சை: கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட ஹெச்ஐவி தொற்று இருந்த ரத்தத்தை, தானமாக அளித்த இளைஞர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கு அவருக்கு விஷமுறிவு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை, சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

5 பேர் கொண்ட குழு விசாரிக்க உத்தரவு
சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மருத்துவத்துறை கூடுதல் இயக்குநர் எஸ்.மாதவி தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வெள்ளிக்கிழமை முதல் விசாரணையைத் தொடங்க சுகாதாரத் துறைச் செயலர் ராதா கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். 

மேலும், இந்த அறிக்கையை ஒரு வாரத்துக்குள் தமிழக அரசிடம் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் அவர்கள் சிவகாசி, சாத்தூர் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ரத்த வங்கி ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com