லாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

திருவொற்றியூரில் சட்டவிரோதமாகக் கடத்திச் செல்லப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை, குட்கா பாக்கு பொட்டலங்கள் அடங்கிய பண்டல்களை
Published on

திருவொற்றியூரில் சட்டவிரோதமாகக் கடத்திச் செல்லப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை, குட்கா பாக்கு பொட்டலங்கள் அடங்கிய பண்டல்களை திங்கள்கிழமை தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தமிழகம் முழுவதும் புகையிலை மற்றும் புகையிலை கலந்த போதை பாக்குகளை விற்பனை செய்யவோ அல்லது உற்பத்தி செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடசென்னை பகுதியில் இவ்வகை பொருள்கள் பதுக்கப்பட்டு வருவதாக வண்ணாரப்பேட்டை காவல் மாவட்ட துணை ஆணையர் சஷாங் சாயிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் திருவொற்றியூரில் உள்ள ரயில்வே சரக்குகளை கையாளும் முனையத்தில் போதைப் பாக்குகள் இறக்கி வைக்கப்பட்டு பின்னர் லாரியில் கடத்தப்படுவதாக சிறப்பு தனிப்படை போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து இப்பகுதியில் போலீஸார் திடீரென வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சரக்குகளை ஆய்வு செய்ததில் ஒரு லாரியில் சுமார் 1,000 கிலோ எடையில் குட்கா பாக்கு பாக்கெட்டுகள் அடங்கிய பண்டல்கள் இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த தனிப்படை போலீஸார், லாரி டிரைவர் கணேசனிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர், கொத்தவால்சாவடியில் உள்ள சந்தீப் என்பவருக்கு சரக்குகள் கொண்டு செல்வதாக தெரிவித்தார். தனிப்படையினர் உடனடியாக டிரைவர் கூறிய முகவரியில் சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அங்கு சுமார் 500 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலங்கள் இருந்தன. அவை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டன.
இரு இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பாக்கு, புகையிலை பொட்டலங்கள் திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. 
இது குறித்து வடசென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சஷாங் சாய் கூறியது:
பறிமுதல் செய்யப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா பாக்குகளின் மதிப்பு ரூ. 10 லட்சம். விசாரணைக்குப் பிறகுதான் இதில் தொடர்புடையவர்கள் யார், யார் என்பது தெரியவரும். இதன் பின்னர் கடத்தலில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவர். மேலும் இப்பகுதியில் தொடர்ந்து இதுபோன்ற திடீர் சோதனை நடத்தப்படும் என்றார் சஷாங் சாய்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com