
கோபிச்செட்டிப்பாளையம்: போக்குவரத்து துறை ஊழியர்கள் கேட்கும் ஊதியத்தை தர தமிழக அரசிடம் மனம் உள்ளது; ஆனால் பணம் இல்லை என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதர அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை ஆகியவற்றை வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் கடந்த நான்கு நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் இன்றும் தொடர்வதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் நிகழ்வு ஒன்றுக்காக கோபிச்செட்டிப்பாளையம் வந்திருந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்தப் போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக போக்குவரத்துத் துறை ஊழியர்களின் கோரிக்கையை முழுமையாக ஏற்று அவர்களுக்கு தேவையான சம்பள உயர்வு வழங்க தமிழக அரசுக்கு மனம் உள்ளது. ஆனால் அதனை நிறைவேற்ற தமிழக அரசிடம் போதிய பணம் இல்லை. அரசு தற்பொழுது கடுமையான நிதிப்பற்றாக்குறையில் தவிக்கிறது. அரசின் இந்த நிலைமையை உணர்ந்து போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். அரசு அறிவித்துள்ள சம்பள உயர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.