மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்கள் ஆகியோரை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்க வகை செய்திடும் சட்ட மசோதா பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: மாநகராட்சிகளின் மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுத்துக் கொள்ள வழிவகை செய்திட கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனாலும், தேர்தல் மூலமே மேயரும், தலைவரும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவும் அதுவே சிறந்த அமைப்பு முறையாகும் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
இதுதொடர்பான கோரிக்கை மனுக்கள் பொது மக்களிடமிருந்தும், வெவ்வேறு அமைப்புகளிடம் இருந்தும் வரப்பெற்றன. மறைமுகத் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் மேயர்கள், தலைவர்கள் அவர்கள் எந்த வார்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டாரோ அதனுடைய வளர்ச்சிப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவார் எனவும், பிற வார்டுகள் மீது கவனம் செலுத்த மாட்டார்கள் எனவும் அரசுத் துறைத் தலைவர்களால் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடித் தேர்தல் முறை: மேயர்கள், தலைவர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தை சார்ந்தே இருக்க வேண்டும் என்பதால், அவர்களால் தனித்து இயங்கி மக்களுக்கான சிறந்த சேவையைச் செய்ய இயலாது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஏற்படுத்தத் தேவையான முடிவினை சுயமாக எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவர்.
எனவே, அரசு கவனமாகப் பரிசீலித்த பிறகு, மாநகராட்சி மேயர்கள், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் முறையில் இருந்து நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் முறைக்கு மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. இதனால், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சிறந்த நல்ல நிர்வாக முறையை கொண்டு வர முடியும். அதிகப்படியான சிறந்த உடனடியான உள்ளாட்சிப் பணிகளை மக்களுக்குச் செய்து தர முடியும். எனவே, அதற்காக சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










