சர்கார்' பட போஸ்டர் சர்ச்சை: நடிகர் விஜய்க்கு நோட்டீஸ்
சர்கார்' படத்தின் போஸ்டரில் நடிகர் விஜய் புகை பிடிப்பதைப் போல் விளம்பரப்படுத்தியுள்ள காட்சியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ்


சர்கார்' படத்தின் போஸ்டரில் நடிகர் விஜய் புகை பிடிப்பதைப் போல் விளம்பரப்படுத்தியுள்ள காட்சியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சிரில் அலெக்ஸாண்டர் தாக்கல் செய்த மனுவில், இந்தியாவில் கோடிக்கணக்கானோர் அடிமைப்பட்டுள்ள புகைப் பழக்கத்தால் ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் இறக்கின்றனர். புகையிலை, சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விளம்பரப்படுத்த கடந்த 2011- ஆம் ஆண்டு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
மேலும், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் இடம்பெறக் கூடிய புகை பிடிக்கும் காட்சிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில், நடிகர் விஜய் நடிக்கும் புதிய படமான சர்கார்' படத்தின் போஸ்டர் விளம்பரம் நாளிதழ்களில் வெளியானது.
அதில் நடிகர் விஜய் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. தமிழ்நாடு விளம்பரப் பொருள் கட்டாய தணிக்கைச் சட்டத்தின் கீழ் இந்த விளம்பர போஸ்டருக்கு தணிக்கைச் சான்றிதழ் பெறவில்லை.
புகையிலை மற்றும் சிகரெட் உள்ளிட்ட பொருள்கள் விளம்பர தடைச் சட்டத்தின்படி மாநில அளவிலான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற சர்ச்சைக்குரிய விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த குழுவுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனம் மீது மாநில கண்காணிப்புக் குழு, பொது சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். புகையிலைப் பொருள்களை விளம்பரம் செய்வதை தடுக்கும் சட்டத்தை தீவிரமாக தமிழக அரசு அமல்படுத்த உத்தரவிட வேண்டும். மேலும், புற்று நோயாளிகள் நலனுக்காக பொது நிதியம் உருவாக்கி, நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் மற்றும் படத்தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.10 கோடி இழப்பீடு வசூலித்து, ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையின் நலனுக்குப் பயன்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள், நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் இரண்டு வார காலத்துக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...