மக்கள் தொகைக்கு ஏற்ப மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்திருக்கிறது. தொகுதி மறுவரையறை என்பது ஆண்டாண்டு காலமாக நடத்தப்பட்ட வழக்கம்தான் என்றாலும் அதில் மத்திய அரசு காட்டும் அவசரமே சந்தேகக் கேள்விகளை எழுப்புகிறது.
மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதாவை உள்ளடக்கிய அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு இன்று மக்களவையில் தாக்கல் செய்திருக்கிறது.
இதில், மக்களவை தொகுதி மறுவரையறை சட்ட திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தத் தவறிய வட இந்திய மாநிலங்களைக் காட்டிலும் தென்னிந்திய மாநிலங்கள் இந்த தொகுதி மறுவரையறையால் கடுமையாக பாதிக்கப்படும் என்பதே பொதுவான குற்றச்சாட்டு.
தொகுதி மறுவரையறை குறித்து மக்களிடையே எழும் பொதுவான கேள்விகள் . . .
பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்ற எளிய சட்டத் திருத்த மசோதா, மிகவும் சர்ச்சைக்குரிய, கடும் எதிர்ப்புகளை சந்திக்கும் தொகுதி மறுவரையறையுடன் இணைக்கப்பட்டு தாக்கல் செய்யப்படுவது ஏன்?
எதிர்க்கட்சிகளும், தென் மாநில முதல்வர்களும் தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்தால், அவர்கள் மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதாகக் கூறி, மத்திய அரசு கொண்டுவரும் பாலின சீர்திருத்தத்தை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதாக மத்திய அமைச்சர்களே கூறுவது நியாயமா?
மூன்று மசோதாக்களில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது எந்த மசோதாவை என்று மக்களுக்குத் தெரியும்தானே?
தொகுதி மறுவரையறை என்பது நாட்டில் 1951, 1961 மற்றும் 1971-ஆம் ஆண்டுகளில் நடைபெற்றுளள்து. ஆனால், பத்தாண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் இந்த மூன்று தொகுதி மறுவரையறைகளும் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், 2026ஆம் ஆண்டு மட்டும் மக்கள் தொகை நடைபெறவிருக்கும் நிலையில், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்ய மத்திய அரசு துடிப்பது ஏன்?
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடங்கவிருக்கும் நிலையில், 15 ஆண்டுகள் பழமையான புள்ளிவிவரங்களை ஏன் பயன்படுத்த வேண்டும்? ஏன் இந்த அவசரம்?
ஏற்கனவே, மாநிலத்துக்கு மாநிலம் குழந்தை பிறப்பு விகிதங்களில் இருக்கும் மாறுபாடுகள், மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தில் சமநிலையின்மை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் மறுவரையறைப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், அந்த அச்சத்தை நிஜமாக்கும் வகையில் அதே நடைமுறையை அவசர அவசரமாகத் தொடர்வது நியாயமா?
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 82, ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பிறகும் மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தொகுதிகளை மறுசீரமைக்க வேண்டும் என்கிறது. இப்போது மக்களவை தொகுதிகள் மட்டும் மறுசீரமைக்கப்பட்டால், பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் சமநிலையின்மை ஏற்படாதா?
ஒவ்வொரு வாக்குக்கும் ஒரே மதிப்பு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே தொகுதி மறுவரையறை. அவ்வாறு தொகுதி மறுவரையறை என்பதை மேற்கொள்ளும்போது அனைத்து மாநிலங்களிலும் ஒரே விதமான மக்கள் தொகை இருக்க வேண்டும். அது சாத்தியமா?
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 81, மாநிலங்கள் முழுவதும் மக்கள் தொகைக்கும் மக்களவை உறுப்பினர்களுக்கான எண்ணிக்கை விகிதம் ஒன்றுபோல இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்கிறது, ஆனால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நாட்டில் இயற்றப்பட்ட சட்டங்களை மதிக்காமல் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாமல் விட்ட மாநிலங்களுக்கு தொகுதி மறுவரையறை என்பது வெகுமதியாக மாறினால்? அது சரியா
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, பொருளாதாரத்தில் மேம்பாட்டு நிலையை ஏற்படுத்திய மாநிலங்களுக்கு, தொகுதி மறுவரையறை என்ற பெயரில் அநீதி இழைக்கப்படலாமா?
தற்போது தொகுதி மறுவரையறை செய்யப்பட்டாலும், மாநிலங்கள் முழுவதும் தற்போதுள்ள பிரதிநிதித்துவ விகிதத்தை அதே நிலையில் வைத்திருப்போம் என்று மத்திய அரசால் உறுதிமொழி அளிக்க முடியுமா?
வளர்ந்து வரும் நாட்டில் வெறும் மக்கள் தொகையை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி போன்ற பொருளாதாரக் குறியீடுகளையும் கருத்தில் கொண்டு தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்ற தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பரிந்துரையை குறைந்தபட்சம் பரிசீலிக்க முடியுமா?
குறைந்த மக்கள் தொகை வளர்ச்சி கொண்ட மாநிலங்களின் அச்சம் காரணமாக கடந்த 1976 முதல் தொகுதி மறுவரையறை முடக்கப்பட்டது. அரசியலமைப்புத் திருத்தம் மூலம் 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறை முடக்கப்பட்டது. மீண்டும் 2001 ஆம் ஆண்டில், மேலும் 25 ஆண்டுகளுக்கு அது நீட்டிக்கப்பட்டது. அது 2026-ஆம் ஆண்டு நீட்டிக்கப்படாது என்றால், மாநிலங்களின் அச்சங்கள் அகண்டிருக்கிறதா? மாநிலங்களின் அச்சங்களை அகற்ற மத்திய அரசு புதிய நடைமுறைகளைப் பரிசீலித்திருக்கிறதா? எதற்காக முடக்கப்பட்டதோ, அந்தக் காரணம் முழுவதும் களையப்பட்டுவிட்டதா?
மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை 543ல் இருந்து 850 என உயர்த்தும் திட்டத்தில், அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றுபோல 50 சதவிகித உயர்வு இருக்கும் என கூறப்பட்டதே? அதனை இப்போது மத்திய அரசு உறுதி செய்யுமா?
மக்கள் தொகைக்கும் மக்களவை உறுப்பினர்களுக்குமான விகிதத்தை நேர் செய்யும்போது, மாநிலங்களுக்கு இடையேயான பிரதிநிதித்துவ வேறுபாட்டை நேர் செய்ய வழிமுறைகள் இருக்கிறதா?
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தத் தவறிய உத்தரப்பிரதேசத்தின் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை 80ல் இருந்து 150 வயரை உயர்த்தப்படும்போது, மக்கள் தொகையைக் குறைத்து, பொருளாதாரம், சமூக மேம்பாடு, சுகாதாரம் போன்றவற்றில் வளர்ந்துள்ள தமிழகத்தின் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை 39-ல் இருந்து 50 ஆக உயர்த்தப்படுவதுதான் நீதியா?
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, பொருளாதார, சமூக மேம்பாட்டை அடைந்த தென் மாநிலங்களுக்கு அநீதி இழைப்பதோடு, இதனை எதிர்க்கும் எதிர்க்கட்சி மற்றும் தென் மாநில தலைவர்களை, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக வெளிப்படுத்துவது தான் உங்கள் நியாயமா? என்று எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மக்களும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறார்கள்.
Summary
Is constituency redelineation a reward for states that don't control population? Questions arise!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மோடியின் அகந்தை தோற்கடிக்கப்பட்டது: ரேவந்த் ரெட்டி
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!

தொகுதி மறுவரையறை! தென் மாநிலங்கள் பாதிக்கப்படுவது எவ்வாறு?
இலக்கு ‘2029’: மோடி அரசு காட்டுவது வேகமா, வியூகமா?
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

