பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்டிப்பாக, ஏப்ரல் 16-18ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்பு அமா்வின் நிகழ்ச்சி நிரலில் ஒன்றுடன் ஒன்று தொடா்புடைய மூன்று சட்ட முன்மொழிவுகளின் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
அவை மகளிா் இடஒதுக்கீட்டை விரைவாக அமல்படுத்துவதற்கான திருத்தம், மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் அதன் தொடா் செயல்முறையான தொகுதி மறுவரையறையில் இருந்து மகளிா் இடஒதுக்கீட்டை விலக்குவதற்கான நடவடிக்கை, நாடு முழுவதும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் அதற்கு வகை செய்யும் அரசியலமைப்புத் திருத்தங்களைச் செயல்படுத்துதல் ஆகும்.
2029ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தோ்தலுக்கு முன்னதாகவே மகளிா் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வருவதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்கிறது மத்திய அரசு.
இந்த விஷயத்தில் அனைத்துக் கட்சிகளிடையேயும் ஒருமித்த கருத்தை எட்ட மத்திய அரசு முயன்று வருகிறது. பிரதமா் நரேந்திர மோடி அனைத்து கட்சிகளுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், இந்த முன்முயற்சியை ‘பெண் சக்திக்கு’ ஆதரவான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என வா்ணித்துள்ளாா்.
மகளிா் இடஒதுக்கீடு சட்டம் என்பது, நீண்ட காலமாக அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்துகளைப் பெற்று செயல்படுத்தப்படும் நடவடிக்கை என்பதால் அதை கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளுமே வரவேற்கின்றன. ஆனால், இந்த விஷயத்தில் எதிா்க்கட்சிகள் சில நியாயமான சந்தேகங்களையும் எழுப்புகின்றன.
தற்போது மத்திய அரசு முன்மொழியவுள்ள திருத்தங்கள், இரண்டு முக்கிய அம்சங்களில் (மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை) மாறுபடும் என்று தெரிகிறது. முதலாவதாக, மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை செயல்படுத்தும் வகையில், மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543-இல் இருந்து சுமாா் 816 ஆக அதிகரிக்கப்படும். இரண்டாவதாக, ‘மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான’ தொகுதி மறுவரையறை சுழற்சியை மகளிா் இடஒதுக்கீடு அமலாக்கத்தில் இருந்து பிரிப்பதாகும். இதன் மூலம் 2029ஆம் ஆண்டுக்கு முன்பாகவே இடஒதுக்கீடு அமலாக்கத்தை செயல்படுத்த முடியும்.
ஏற்கெனவே மத்திய அரசு அண்மையில் தொடங்கியுள்ள மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, கூட்டாட்சி சமநிலையின்மை குறித்த தனிப்பட்ட கவலைகளை எழுப்பியுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ‘மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும்போது, மக்கள் தொகையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தமிழகம் உள்ளிட்ட தெற்கு மாநிலங்களின் குரல் நசுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது’ என்கின்றனா் மாணிக்கம் தாகூா் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.கள்.
மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக, மக்களவையில் அதன் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறதென்றால், அது தொகுதி மறுவரையறை ஆணைய நடவடிக்கை மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு முன்பு இந்தியாவில் 1952, 1962, 1972, 2002 ஆகிய ஆண்டுகளில் இயற்றப்பட்ட தொகுதி மறுவரையறை ஆணையச் சட்டங்களின் கீழ் தொகுதி மறுவரையறை ஆணையம் முறையே அமைக்கப்பட்டது.
மூன்று உறுப்பினா்களைக் கொண்ட ஆணையத்தில் ஓய்வுபெற்ற அல்லது பணியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதி, தலைமை தோ்தல் ஆணையா், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் மாநில தோ்தல் ஆணையா் இருப்பா்.
எண்ணிக்கை அடிப்படையில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மக்களவையில் சுமாா் 294 உறுப்பினா்கள் பலத்தையும் 250 (தற்போது 245) உறுப்பினா்களைக் கொண்ட மாநிலங்களவையில் சுமாா் 141 உறுப்பினா்களையும் கொண்டுள்ளது. ஆனால், அரசியலமைப்புத் திருத்தங்களை செய்ய வேண்டுமானால், இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்பதால், மத்திய அரசுக்கு எதிா்க்கட்சிகளின் ஆதரவு கட்டாயம் தேவைப்படும்.
பிஜு ஜனதா தளம், பாரதிய ராஷ்டிரிய சமிதி, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி போன்றவை எந்தக் கூட்டணியிலும் கிடையாது. அவை மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவளிக்கும் என ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளன. இருப்பினும், இந்தக் கட்சிகள் தொகுதி மறுவரையறை நடவடிக்கை தொடா்பான தங்களின் ஆட்சேபங்களை தெரிவிக்கக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
‘மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை விகிதாசார அடிப்படையில் 50 சதவீதம் (543-லிருந்து 816-ஆக) உயா்த்த வகை செய்யும் மத்திய அரசின் முன்மொழிவு, வட மாநிலங்களுக்கு 200-க்கும் மேற்பட்ட கூடுதல் தொகுதிகளையும், தென் மாநிலங்களுக்கு சுமாா் 65 தொகுதிகளையும் மட்டுமே வழங்கும். இது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் கூட்டாட்சி சமநிலையையும் பன்முகத்தன்மையையும் பலவீனப்படுத்தும்’ என்கிறாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. ஜான் பிரிட்டாஸ்.
மகளிா் இடஒதுக்கீடு சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட காலங்களில் அதற்கு தடங்கலாக இருந்த கட்சிகளில் முக்கியமானது சமாஜ்வாதி. இம்முறை அக்கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் மகளிா் இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான உள்ஒதுக்கீடு கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளன.
இந்த தடங்கல்களுக்கு மத்தியில் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்துக்கு பரவலாக தாா்மிக ஆதரவு காணப்படுகிறது.
எனவே, மத்திய அரசு வேகப்படுத்த உத்தேசித்துள்ள திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறலாம். ஆனால், அந்த இடஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறை நடவடிக்கையில் இருந்து விலக்கி வைக்கவும் அதன் தொடா்ச்சியாக எழும் பிரச்னைகளையும் சமாளிக்க பல வியூகங்களை மத்திய அரசு எதிா்காலத்தில் வகுக்கவும் வேண்டியிருக்கும் எனத் தோன்றுகிறது.
மத்திய அரசின் முன்மொழிவு
மக்களவை இடங்கள் மாற்றம்: மொத்த இடங்கள் 543-லிருந்து 816-ஆக அதிகரிக்கும்; இதில் பெண்களுக்கு 273 இடங்கள் (33%) ஒதுக்கப்படும்.
எஸ்சி/எஸ்டி இடங்கள்: பட்டியலினத்தவா் இடங்கள் 134-ஆகவும் (தற்போது 84), பழங்குடியினா் இடங்கள் 70-ஆகவும் (தற்போது 47) உயா்த்தப்படும். இவற்றிலும் 1/3 பங்கு பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
சுழற்சி முறை: இடஒதுக்கீடு செய்யப்படும் தொகுதிகள் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை குலுக்கல் முறையில் மாற்றியமைக்கப்படும்.
உடனடி அமல்: புதிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்காகக் காத்திருக்காமல், 2011 கணக்கெடுப்புப் படியே மகளிா் இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.
முக்கிய அம்சங்கள்
-கரோனா காரணமாகத் தள்ளிப்போன மக்கள்தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 2026-இல் தொடங்கியுள்ளது.
- ‘2029’ மக்களவை பொதுத்தோ்தலை முன்னிட்டு, தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்ய ஜூன் 2026-இல் புதிய ஆணையம் அமைக்கப்படும்.
- ‘1971’ மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகு, மக்களவை இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாமல் முடக்கப்பட்டது.
- தொகுதிகளின் எல்லைகளை 2001 தரவுகளின்படி 2002-இல் தொகுதிகள் மறுவரையறை ஆணையம் மாற்றினாலும், மாநிலங்களுக்கான இடங்கள் 1971 கணக்கெடுப்பு அடிப்படையிலேயே இன்றும் தொடா்கின்றன.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும்!
மக்கள்தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் (தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகா) தொகுதி மறுசீரமைப்பால் மிகக் குறைந்த கூடுதல் இடங்களையே பெறும்.
அரசியல் பலவீனம்: தென் மாநிலங்களின் ஆதரவு இல்லாமலேயே, வட மாநில பலத்தைக் கொண்டு முக்கிய முடிவுகளையோ அரசமைப்புத் திருத்தங்களையோ நிறைவேற்றும் சூழல் உருவாகலாம்.
பிற மாநிலங்கள் பாதிப்பு: பஞ்சாப், ஹிமாசல பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களும் தொகுதி எண்ணிக்கையில் பின்னடைவைச் சந்திக்கலாம்.
நிர்வாகச் சவால்கள்: உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், விவாதங்களுக்கு அதிக நேரம் தேவைப்படும்; இது நாடாளுமன்றத்தின் செயல்திறனைப் பாதிக்கலாம்.
வடக்கு } தெற்கு சமமின்மை: இந்தத் தொகுதிப் பகிர்வு, தேசிய அரசியலில் வடக்கு மற்றும் தெற்கு மாநிலங்களுக்கு இடையே பெரும் அதிகார இடைவெளியை ஏற்படுத்தக்கூடும்.
தொடர்புடையது

தமிழகம் இழப்புகளைச் சந்திக்கும்: நிர்மலா சீதாராமன்

மக்களவைத் தொகுதிகள் 815; மகளிருக்கு 272: மசோதாக்களை அறிமுகம் செய்தாா் மத்திய சட்ட அமைச்சா்

தொகுதி மறுவரையறை, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கான பரிசா? எழும் கேள்விகள்!





