
புது தில்லி: தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்குமாறு மதுரை உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நீட் தேர்வில் ஆங்கில வினாத்தாளை தமிழில் மொழிபெயர்த்ததில் ஏற்பட்ட பிழைகளுக்குப் பொறுப்பேற்று சிபிஎஸ்இ நிர்வாகம் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.
முன்னதாக நீட் தேர்வை தமிழில் சுமார் 24 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர். இந்நிலையில், தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு, வினாத்தாள் பிழைகளின் காரணமாக கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மாநிலங்களவை மார்க்சிஸ்ட் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தொடுத்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக டி.கே. ரங்கராஜன் எம்பி சார்பில் கடந்த புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நீட் மூலம் எம்பிபிஎஸ் இடத்திற்கு தேர்வாகியுள்ள தமிழக மாணவர் சத்யா என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், கலந்தாய்வில் பங்கேற்று எம்பிபிஎஸ் இடம் கிடைக்கப் பெற்ற மாணவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சிபிஎஸ்இ, தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) பிரிவின் செயலர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், நீட் தேர்வு மதிப்பெண் விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை அமல்படுத்தக் கூடாது' என்றும், வினாத்தாளில் மொழி பெயர்ப்புக்கு தமிழக அரசு பரிந்துரை செய்த மொழிபெயர்ப்பாளர்களே பயன்படுத்தப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் சிபிஎஸ்இ தரப்பில் வழக்குரைஞர் தாரா சந்த் சர்மா செவ்வாய்க்கிழமை ஆஜராகி இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதேபோன்று, மாணவர் சத்யா சார்பில் வழக்குரைஞர் கோவிலன் பூங்குன்றன் ஆஜராகி, நீட் தேர்வில் தேர்வாகி கலந்தாய்வில் மருத்துவ இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்களின் கருத்தை அறிவதற்கான வாய்ப்பு அளிக்கப்படாமல் உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. எனவே மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.
அப்போது, மேல்முறையீட்டு மனு உள்ளிட்ட மனுக்கள் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 20) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தெரிவித்தது.
அதன்படி வெள்ளியன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது நீட் தேர்வில் தமிழில் எழுதிய மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்குமாறு மதுரை உயர் நீதிமறக்க கிளை பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.