தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகச் செலவிட முடியவில்லை: பேரவை உறுப்பினர் ஆர்.நட்ராஜ் ஆதங்கம்

பல்வேறு துறைகளிடமிருந்து தடையின்மைச் சான்றிதழ், திட்ட மதிப்பீடுகள் பெறுவதில் ஏற்படும் தாமதங்களால் தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகச் செலவிட முடியவில்லை
தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகச் செலவிட முடியவில்லை: பேரவை உறுப்பினர் ஆர்.நட்ராஜ் ஆதங்கம்
Updated on
1 min read

பல்வேறு துறைகளிடமிருந்து தடையின்மைச் சான்றிதழ், திட்ட மதிப்பீடுகள் பெறுவதில் ஏற்படும் தாமதங்களால் தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகச் செலவிட முடியவில்லை என்று சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.நட்ராஜ் பேரவையில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
சட்டப்பேரவையில் சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் ஆர்.நட்ராஜ் பேசியது:
தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வரையறுக்கப்பட்ட பணிகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் பரிந்துரைப்பதன் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பல துறைகளிடமிருந்து தடையின்மைச் சான்றிதழ் வாங்குவது மற்றும் திட்ட மதிப்பீடுகள் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.
மாநிலங்களில் தொகுதி மேம்பாட்டு நிதி பயனளிப்பு பற்றி வல்லுநர்கள் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
அதில் சட்டப்பேரவை உறுப்பினர்களால் பதவி ஏற்ற முதல் இரண்டு ஆண்டுகளில் 20 சதவீதத்துக்கும் குறைவான பணிகள் நிறைவேற்றப்படுகின்றன. அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 20 சதவீத பணிகளும், கடைசி ஐந்தாம் ஆண்டில் அவசரம் அவசரமாக பதவிக் காலம் முடிவதற்குள் செலவு செய்ய முயற்சி எடுக்கப்பட்டு, முடிவில் சராசரியாக 40 சதவீத தொகுதி மேம்பாட்டுத் தொகை செலவு செய்யப்படாமலே திரும்ப ஒப்பளிக்கப்படுகிறது என்று ஆய்வில் வெளிவந்துள்ளது.
திருப்பி அளிக்கப்பட்ட ரூ.3.91 கோடி: 2011-16-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 கோடி. இதில் ரூ.6.09 கோடி செலவு செய்யப்பட்டு, மீதமுள்ள ரூ.3.91 கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பல துறைகளிடம் அனுமதி மற்றும் திட்ட மதிப்பீடு பெறுவதில் ஏற்படும் தாமதங்கள்தான்.
நான் சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்ற பிறகு என்னுடைய பரிந்துரைகளைச் செயலாக்குவதற்காக அரசு துறைகளில் கோப்புகளை பின் தொடர்வதற்கு என்றே பிரத்யேகமாக பணியாளர்களை நியமித்தேன். அப்படியும் பணிகள் காலதாமதம் ஆவது மிகவும் வேதனை அளிக்கிறது. இது அனைத்துச் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்தாகவும் உள்ளது.
அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் தலைவராக இருந்தபோது தேர்வு எழுதுவதற்கான வயது உச்ச வரம்பை தளர்த்த வேண்டும் என்று அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் கோரினேன். பரிசீலிப்பதாக அவர் கூறினார். இப்போது தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பு 2 ஆண்டுகள் தளர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார். அதற்கு நன்றி என்றார் நட்ராஜ்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com