பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்
/

அணை பாதுகாப்பு வரைவு மசோதாவுக்கு எதிரான தீர்மானம்: முதல்வர் உரையின் முக்கியம்சங்கள்

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் அணை பாதுகாப்பு வரைவு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை சட்டப்பேரவையில் இன்று முதல்வர் பழனிசாமி முன்மொழிந்து உரையாற்றினார்.

News image
Updated On :26 ஜூன் 2018, 1:03 pm IST

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் அணை பாதுகாப்பு வரைவு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை சட்டப்பேரவையில் இன்று முதல்வர் பழனிசாமி முன்மொழிந்து உரையாற்றினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஆற்றிய உரையில்..

மத்திய அரசு,  2010-ஆம் ஆண்டு  வரைவு அணை பாதுகாப்பு மசோதாவை தயாரித்து  மாநில  அரசுகளின்  கருத்துக்களை    கேட்டது. இந்த வரைவு மசோதாவில்,  தமிழ்நாடு  அரசால்  கட்டப்பட்டுள்ள  அணைகள் அண்டை  மாநிலத்தில்  இருக்கும்  போது  அதனை  இயக்குதல்  மற்றும்  பராமரித்தல்  சம்பந்தமாக  பிரச்சனைகள்  ஏற்படும்  என்ற காரணத்தால், அந்த    வரைவு மசோதாவில் இடம்பெற்ற தமிழ்நாட்டிற்கு பாதகமான அம்சங்கள் குறித்து  மறுப்பு தெரிவிக்கப்பட்டு, அவைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்  என  அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடிதங்களின்  வாயிலாக பிரதமரை கேட்டுக் கொண்டார்கள். 

எனினும், இந்த வரைவு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு,  நாடாளுமன்றத்தின்  நிலைக்குழுவின் கருத்து வேண்டி அனுப்பி வைக்கப்பட்டது. அத்தருணத்தில், 3.8.2011  அன்று புது டில்லியில்  அஇஅதிமுக  நாடாளுமன்ற  உறுப்பினரான  டாக்டர்.  திரு.  வேணுகோபால், நமது  பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகளும் நீர்வள   ஆதாரத்திற்கான பாராளுமன்ற நிலைக்குழுவின்  தலைவரான  கோகாய் அவர்களை நேரில்  சந்தித்து ஜெயலலிதா மறுப்புக்களை  விரிவாக  எடுத்துரைத்தனர்.

கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு, 2010 ஆம் ஆண்டைய வரைவு அணை பாதுகாப்பு மசோதாவை கைவிட்டது. இருப்பினும், அணை பாதுகாப்பு குறித்து, நாடு முழுவதும் பின்பற்றக் கூடிய ஒரு சட்டத்தை இயற்ற, மத்திய  அரசு 2016-ஆம்  ஆண்டு  ஒரு  வரைவு  அணை பாதுகாப்பு மசோதாவை தமிழ்நாட்டின் கருத்து கோரி அனுப்பி வைத்தது.

இந்த  வரைவு  மசோதாவை  தமிழ்நாடு  அரசு  விரிவாக  ஆய்வு  செய்ததில், தமிழ்நாட்டிற்கு பாதகமான அம்சங்கள் கண்டறியப்பட்டது.  அதில்  குறிப்பாக, ஒரு   மாநிலத்திற்குள் ஓடுகின்ற  நதியின்  குறுக்கே அணைகள்  மற்றும்  நீர்த்தேக்கங்களை  அந்தந்த  மாநிலமே  கட்டிக்கொள்வது குறித்து அரசியல்  சாசனத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது.  அவ்வாறு  கட்டப்படும் அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் அந்த மாநிலத்திற்கே சொந்தமானது என்றும், அவைஅம்மாநிலங்களாலேயே    இயக்கப்பட்டும்,    பராமரிக்கப்பட்டும்     வரும் என்றும், இந்த வரைவு மசோதாவில் தேசிய அணை பாதுகாப்பு நிறுவனத்திற்கு மாநிலங்களிலுள்ள  அணைகள்  மற்றும்  நீர்த்தேக்கங்களை  ஆய்வு  செய்யும் அதிகாரங்களை    அளிக்க    உத்தேசித்திருப்பது, நடைமுறைக்கு    உகந்ததாக இருக்குமா என  தெரியவில்லை.

மாநிலங்களுக்கு    இடையேயான ஒப்பந்தங்கள்  மூலம் ஒரு    மாநிலம் வேறொரு  மாநிலத்தில் கட்டிய அணைகள்,     அந்த     அணையை     கட்டிய மாநிலத்திற்கு  சொந்தமானதாகும்  மற்றும்  அதனை  இயக்குகின்ற  மற்றும் பராமரிக்கக்  கூடிய  பொறுப்புகள்  அம்மாநிலத்தின்  அதிகாரவரம்பிற்கு உட்பட்டதாகும்  என்பது    உச்ச  நீதிமன்றத்தால்  உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 

முல்லைப்  பெரியாறு,    பரம்பிக்குளம்,  தூணக்கடவு  மற்றும்  பெருவாரிப்பள்ளம் அணைகள், அண்டை   மாநிலமான   கேரளாவுடன்   ஏற்படுத்தப்பட்ட  ஒப்பந்தங்களினால் தமிழ்நாடு  அரசால் கட்டப்பட்டும், இயக்கப்பட்டும் மற்றும் பராமரிக்கப்பட்டும் வருகின்றன. 

இத்தகைய அணைகள் பற்றிய விவரம் குறித்து இந்த  வரைவு  மசோதாவில்      இடம்  பெறவில்லை.  மத்திய  அரசின் அமைச்சரவையினால்  ஒப்புதல்  வழங்கப்பட்ட வரைவு  மசோதாவினால்,  இந்த அணைகளை பராமரிப்பதில் இடையூறுகள் ஏற்படும். 

உத்தேசிக்கப்பட்டுள்ள தேசிய   அணை   பாதுகாப்பு   ஆணையம் மற்றும் அணை பாதுகாப்புக் குழு ஆகிய அமைப்புகளினால் அணைகளை பராமரிப்பதில் ஏற்படும் இடையூறுகளில் தீர்வு காண இயலாது.  

ஒவ்வொரு மாநிலத்திலும் அணை பாதுகாப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இவை,    மத்திய    நீர்வளக்    குழுமம்  அவ்வப்போது  அளித்துவரும்  வழிகாட்டி நெறிமுறைகளின்படி  செயல்பட்டு  வருகின்றன.   மேலும்,  அந்தந்த  மாநிலத்தைச் சார்ந்த  அனுபவம்  மற்றும்  திறமை  வாய்ந்த  பொறியாளர்கள், அணை  பாதுகாப்பு குறித்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இவைகளை எல்லாம் சுட்டிக்காட்டி, 2016ம் ஆண்டு ஜெயலலிதா,  பிரதமருக்கு கடிதம்  அனுப்பினார்கள். இக்கடிதத்தில்,  இவ்வரைவு  மசோதா  மாநிலங்களின்  அதிகாரங்களில்  குறுக்கீடு  செய்கிறது  என்றும்,  மாநிலங்களுக்கிடையே  ஏற்பட்ட  ஒப்பந்தங்களின்படி, அண்டை மாநிலத்தில் இருக்கும் தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான அணைகளை இயக்குதல்  மற்றும்  பராமரித்தல்  ஆகியவற்றில்  பல்வேறு  பிரச்சனைகள் எழக்கூடும்  என்றும்,    எனவே,  இந்த  மசோதா    அவசர  கதியில்  பரிசீலிக்கப்பட கூடாது  எனவும், அனைத்து  அம்சங்களும்  விரிவாக  பரிசீலிக்கப்பட்ட  பின்னரே சட்டம்  இயற்றுவது  குறித்து  மத்திய  அரசு  பரிசீலிக்க  வேண்டும்  எனவும் வலியுறுத்தி, 2016 -  ஆம்  ஆண்டைய  வரைவு அணை  பாதுகாப்பு மசோதாவிற்கு கடுமையான  எதிர்ப்பை தெரிவித்தார்கள்.      

தமிழ்நாடு அரசு இம்மசோதாவிற்கு தன்னுடைய எதிர்ப்பினை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 2018 - ஆம்    ஆண்டைய அணை    பாதுகாப்பு    மசோதாவிற்கு,  மத்திய அமைச்சரவை 13.6.2018 அன்று ஒப்புதல் அளித்துள்ளது என  பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.  

இந்த வரைவு மசோதாவின் மீது  மத்திய  அரசு  தமிழ்நாட்டின்  கருத்தை கோரவில்லை.  இந்த வரைவு மசோதாவில், தமிழ்நாட்டின் உரிமைகளை பாதிக்கும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாலும், குறிப்பாக, அண்டை மாநிலத்தில், தமிழ்நாடு அரசால்  கட்டப்பட்டுள்ள  அணைகளான  முல்லைப்பெரியாறு,  பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய அணைகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல் போன்றவற்றிற்கு பல்வேறு பிரச்சனைகள் இவ்வரைவு மசோதாவால் எழக்கூடும்  என்பதாலும்,  மாநிலங்களை  கலந்தாலோசித்து,  மாநிலங்களின் ஒருமித்த கருத்து ஏற்படும் வரையில், மத்திய அரசு, அணை பாதுகாப்பு சட்டத்தை  இயற்றக்கூடாது  எனவும்,  அது  வரையில்  மத்திய அமைச்சரவை தற்பொழுது எடுத்துள்ள முடிவை நிறுத்திவைக்க வேண்டும் எனவும், நான்  15.6.2018 அன்று  பிரதமருக்கு  அனுப்பிய  கடிதத்தில்  கேட்டுக் கொண்டேன்.

27.2.2006 மற்றும்  7.5.2014  ஆகிய  நாளிட்ட  உச்ச நீதிமன்ற   தீர்ப்புகளில், முல்லைப்  பெரியாறு  அணைப்  பிரச்சினையில்,  தமிழ்நாட்டின்  உரிமைகள் நிலைநாட்டப்பட்டு,  அத்தீர்ப்புகளின்படி 21.11.2014  மற்றும்  7.12.2015  ஆகிய நாட்களில் முதற்கட்டமாக  142  அடி  வரையில் அணையில் நீர்    தேக்கி வைக்கப்பட்டது.    மேலும்,  மத்திய  நீர்  வளக்  குழுமம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால்  நியமிக்கப்பட்ட வல்லுநர்  குழுவின்  பரிந்துரைகள் மற்றும்  உச்சநீதிமன்ற தீர்ப்புகளின்படி,  தமிழ்நாடு  அரசு, முல்லைப்பெரியாறு  அணையின்  முழு  நீர்மட்ட  அளவான 152 அடி வரையில் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.    இதன்பொருட்டு,  தமிழ்நாடு  அரசு  செய்து  முடிக்க வேண்டிய  மீதமுள்ள  பலப்படுத்தும்  பணிகளைச்  செய்வதற்கு  கேரள  அரசு ஒத்துழைப்பு  அளிக்காமல்,  தொடர்ந்து  இடையூறுகளை  ஏற்படுத்தி  வருகிறது. 

எனினும்,  தமிழ்நாடு  அரசு  இவ்விடையூறுகளை  நீக்கி,  பணிகளை  விரைந்து செய்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இந்நிலையில், அணை பாதுகாப்பு குறித்து மத்திய அரசு உத்தேசித்துள்ள சட்டத்தை  நிறைவேற்றுமானால்,  அணை  பாதுகாப்பு  என்ற  போர்வையில், முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகளைப் பராமரிப்பதில் தமிழ்நாட்டிற்கு இடையூறுகள் ஏற்படும்.

மத்திய அமைச்சரவை 13.6.2018 அன்று இசைவு அளித்துள்ள, 2018 ஆம் ஆண்டைய   வரைவு   அணை   பாதுகாப்பு   மசோதாவை   நிறுத்தி   வைக்கவும், மாநிலங்களை  கலந்தாலோசித்து,  மாநிலங்களின்  ஒருமித்த  கருத்து  ஏற்பட்ட பின்னரே, மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்றலாம் எனவும்,  அது வரையில்  மத்திய அரசு,  அணை பாதுகாப்பு  சட்டத்தை இயற்ற உத்தேசித்துள்ள நடவடிக்கைகளை  நிறுத்திவைக்க  வேண்டும் என்ற கீழ்க்கண்ட  தீர்மானத்தை முன்மொழிகிறேன்.  

தீர்மானம் 
“மத்திய  அரசு  இயற்ற  உத்தேசித்துள்ள 2018  ஆம்  ஆண்டைய  வரைவு அணை பாதுகாப்பு மசோதாவில்,  தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடிய  அம்சங்கள்  உள்ளதாலும்,  குறிப்பாக, தமிழ்நாடு  அரசால்  அண்டை  மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள  அணைகளை    இயக்குதல்  மற்றும்  பராமரித்தல் பணிகளில் பல்வேறு    பிரச்சனைகள்    எழக்கூடும் என்பதாலும்,    மாநிலங்களை  கலந்தாலோசித்து ஒருமித்த  கருத்து ஏற்பட்ட  பின்னரே,  மத்திய  அரசு  அணை  பாதுகாப்பு  சட்டத்தை  இயற்ற வேண்டும்  எனவும்,  அது  வரையில்,  மத்திய  அரசு அணை  பாதுகாப்பு  சட்டத்தை  இயற்ற எடுத்துள்ள  நடவடிக்கைகளை  நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், இம்மாமன்றம் மத்திய அரசை வலியுறுத்தி  கேட்டுக் கொள்கிறது.”

இந்த தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றித்தரும்படி தங்கள் வாயிலாக இம்மாமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.