பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சென்னை கோட்டத்தின் மாதிரி ரயில் நிலையமாகுமா அரக்கோணம்?

இந்தியாவின் மூன்றாவது ரயில் பாதையாக 1956-இல் அமைக்கப்பட்ட ராயபுரம் - வாலாஜாபேட்டை ரயில் மார்க்கத்தில் முக்கிய சந்திப்பாக

News image
Updated On :25 மார்ச் 2018, 8:34 pm

எஸ்.சபேஷ்

இந்தியாவின் மூன்றாவது ரயில் பாதையாக 1956-இல் அமைக்கப்பட்ட ராயபுரம் - வாலாஜாபேட்டை ரயில் மார்க்கத்தில் முக்கிய சந்திப்பாக அமைக்கப்பட்ட அரக்கோணம் ரயில் நிலையம் 150 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது புதுப்பொலிவு பெற உள்ளது. வெகு விரைவில் இந்த ரயில் நிலையம் சென்னை கோட்டத்தின் மாதிரி ரயில் நிலையமாக மாற இருப்பதாகவும் கோட்ட ரயில்வே அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
 ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1853-ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது ரயில் பாதையை தென்னிந்திய பகுதிகளில் மேற்கொள்ள அப்போதைய ஆங்கில அரசு முடிவு செய்தது.
 இதையடுத்து, உடனடியாக பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், 1856 ஜூன் 1-ஆம் தேதி ராயபுரம் - வாலாஜாபேட்டை இடையே போக்குவரத்து தொடங்கியது. மேலும் 1862-இல் அரக்கோணம் - ரேணிகுண்டா இடையே ரயில் பாதை அமைக்கப்பட்டு, அதிலும் போக்குவரத்து தொடங்கியது. 1853-ஆம் ஆண்டு முதல் ராயபுரம் - வாலாஜாபேட்டை இடையே முக்கிய ரயில் நிலையமாக அரக்கோணம் ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. அக்காலத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களை வட மாநிலங்களோடு இணைக்கும் மிகப்பெரிய சந்திப்பாக அரக்கோணம் ரயில் நிலையம் செயல்பட்டது.
 150 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்துவரும் அரக்கோணம் ரயில் நிலையம் ஆரம்பிக்கப்பட்டபோது, கட்டப்பட்ட மைய கட்டடம், 1 மற்றும் 2-ஆவது நடைமேடைகள், நிலைய மேம்பாலம், சுரங்கப் பாதைகள் ஆகியன ஆங்கிலேயர் காலத்தில் கட்டுமானத்தை பறைசாற்றும் வகையில் இன்றளவும் பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. பின்னாளில், அரக்கோணம் ரயில் நிலையத்தில் நடைமேடைகள் 3, 4, 5 ஆகியவை விரிவுபடுத்தப்பட்டன. 1861-இல் சென்னை - திருச்சிராப்பள்ளி ரயில் இயக்கப்பட்டதை அடுத்து அரக்கோணம் - செங்கல்பட்டு இடையே ரயில் பாதை அமைக்கப்பட்டதால் அரக்கோணம் ரயில் நிலையம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது.
 இந்நிலையில், தற்காலத்தில் சென்னையின் புறநகராக அரக்கோணம் மாறி விட்ட நிலையில், மின்சார ரயில்களின் போக்குவரத்து அதிகரித்து விட்டதாலும், அரக்கோணம் ரயில் நிலையத்தை மாதிரி ரயில் நிலையமாக மாற்றவும் தெற்கு ரயில்வே முடிவு செய்தது. மேலும் தெற்கு ரயில்வேயின் கனவு திட்டங்களில் ஒன்றான சர்க்குலர் ரயில் அதாவது சென்னை - திருவள்ளூர் - அரக்கோணம் - காஞ்சிபுரம் - செங்கல்பட்டு - தாம்பரம் - கடற்கரை - சென்னை வட்டப்பாதையில் ரயில் இயக்கப்பட்டால் அதில் முக்கிய ரயில் சந்திப்பாக அரக்கோணம் மாறும் என்பதால், அரக்கோணம் ரயில் நிலையத்தை அழகுபடுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்தது.
 அரக்கோணம் ரயில் நிலையத்தின் நடைமேடைகள் குறிப்பாக 1 மற்றும் 2 நடைமேடைகளை 26 பெட்டிகள் நிற்கும் அளவுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இப் பணிகள் 75 சதவீதம் முடிவடைந்த நிலையில், ஏப்ரல் 20 முதல் மே 18 வரை சமிக்ஞை பிரிவினரின் பணிகள் நடைபெற உள்ளன.
 இத்துடன் நிலையத்தில் உள்ள 1 மற்றும் 2-ஆவது இருப்புப் பாதையில் உள்ள வளைவுகள் அகற்றப்பட்டு நேர்பாதையில் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏப்ரல் 20 முதல் மே 18 வரை அரக்கோணம் வழியே செல்லும் ரயில் போக்குவரத்தில் தாற்காலிக நேர மாறுதல்கள் செய்யப்பட உள்ளதாகவும் பொறியியல் பிரிவு அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
 நடைமேடைகள் நீட்டிப்பு செய்யப்படுவதால் நிலையத்தின் தெற்கு பகுதியில் மேலும் 1ஏ, 1பி, 1சி என மூன்று நடைமேடைகள் கூடுதலாக அமைக்கப்படும். பயணிகளின் வசதிக்கேற்ப அரக்கோணம் ரயில் நிலையத்தின் உட்புறம் இரு ஃபுட் பிளாசாக்கள் அமைய உள்ளன. நிலையத்தில் பயணிகள் நடைமேடை மாறும் வசதிக்காக மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட உள்ளன. மேலும் தற்போது 2 மற்றும் 3-ஆவது நடைமேடைகளுக்கு இடையே உள்ள மிகப் பழைமையான கட்டடத்தின் முதல் தளங்கள் இடிக்கப்பட உள்ளன. நிலையத்தில் பயணிகள் தங்கும் அறைகள் நவீன வசதிகளோடு புதிதாக கட்டப்பட உள்ளன.
 இந்த வசதிகள் குறித்து தெற்கு ரயில்வே தலைமை அலுவலக அலுவலர்கள், சென்னை கோட்ட அலுவலர்கள் அரக்கோணம் ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகளான அதன் தலைவர் நைனாமாசிலாமணி, செயலர் ரகுநாதன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் கூட்டம் நடத்தி அவர்களது ஆலோசனையைப் பெற்று, நிலையத்தை புதுப்பொலிவு பெறச் செய்ய முனைந்துள்ளனர்.
 சங்க நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். இந்த வசதிகள் அனைத்தும் படிப்படியாக செய்து தரப்பட உள்ளதாகவும் இப்பணிகள் அதிகபட்சம் ஒரு வருடத்தில் முடிவுக்கு வரலாம் எனவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
 
 
 
 
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.