தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் நேரடி ஆய்வு 

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் நான்கு பேர் நேரடியாக தூத்துக்குடிக்குச் சென்று ஆய்வு செய்ய உள்ள தகவல் வெளியாகியுள்ளது
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் நேரடி ஆய்வு 

புதுதில்லி: துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் நான்கு பேர் நேரடியாக தூத்துக்குடிக்குச் சென்று ஆய்வு செய்ய உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்து வந்த போராட்டத்தின் நூறாவது நாளான கடந்த செவ்வாயன்று துவங்கி போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  அதே சமயம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட திங்களன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் நான்கு பேர் நேரடியாக தூத்துக்குடிக்குச் சென்று ஆய்வு செய்ய உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி வழக்குரைஞர் ராஜராஜன் என்பவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் சார்பில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

ஆனால் இச்சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் தலைமைச் செயலர், காவல் துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்குரைஞர் ஏ. ராஜராஜன் தில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தார். இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி ராஜீவ் ஷக்தேர் அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரர் சார்பில் வழக்குரைஞர் சபரீஷ் ஆஜராகி, 'தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் மே 23ஆம் தேதி மனு அளிக்கப்பட்டது. ஆனால், இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் தலைமைச் செயலர், காவல் துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது' என்றார்.

அப்போது குறுகிட்ட நீதிபதி ராஜீவ் ஷக்தேர், அப்படியென்றால் என்ன பிரச்னை என வினவினார். இதைத் தொடர்ந்து, வழக்குரைஞர் சபரீஷ், 'சுதந்திரமான விசாரணை நடைபெறவில்லையென்றால், காவல்துறையால் நிகழ்த்தப்பட்டுள்ள இத்தகைய கொடூர சம்பவத்தில் உண்மை வெளிவராது' என்றார். 

அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, 'தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதே, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் ஏன் முறையிடக் கூடாது' என மீண்டும் கேள்வி எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து, வழக்குரைஞர் சபரீஷ் வாதிடுகையில், 'துப்பாக்கிச் சூடு சம்பவத்தை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் தலைமைச் செயலர், காவல் துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு உத்தரவிட்ட நாளில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்' என்றார்.

இதையடுத்து, நீதிபதி ராஜீவ் ஷக்தேர் பிறப்பித்த உத்தரவில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்ற வழக்குரைஞரின் முறையீடு குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடிவு செய்ய வேண்டும். இந்த முறையீட்டை மனுதாரர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் செவ்வாய்க்கிழமை (மே 29) முன்வைக்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி செவ்வாயன்று மீண்டும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்குரைஞர் ராஜராஜன் முறையிட்டார். அப்பொழுது ஆணையம் பிறப்பித்த உத்தரவானது பின்வருமாறு:

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் நான்கு பேர் நேரடியாக தூத்துக்குடிக்குச் சென்று சம்பவ இடங்களில் ஆய்வு செய்வார்கள்.

துப்பாக்கிச் சூடு பற்றி மட்டும் அல்லாமல் போராட்டகாரர்கள் மீதான பொய் வழக்குகள், சட்டவிரோதமாக அடைத்து வைத்த விவகாரம் மற்றும் இதர மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் விசாரிப்பார்கள்.

இந்த் குழுவானது இரண்டு வாரத்தில் விசாரித்து இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கும். அதனைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com