தமிழக போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் 

தமிழக போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழக போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் 
Published on
Updated on
1 min read

சென்னை: தமிழக போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஓய்வூதியப் பலன்களை வழங்குதல், நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து துறைக்கென கூடுதல் நிதி ஒதுக்குதல் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் துறை ஊழியர்கள் போராட்டத்தினை அறிவித்திருந்தனர்.  

இது தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் போராட்டம் தொடர்ந்து வந்தது. அதுவும் தீபாவளி சமயத்தில் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்ற பதற்றம் நிலாவியது. 

அதேசமயம் வியாழன் அன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:

போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்று 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டு விட்டது. மேலும் முன்பணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்கள். ரூ. 45 கோடி முன்பணம் வழங்க தமிழக முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்தத் தொகை வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 2017 -ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2018-ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய நான்கு மாதங்களுக்கு கணக்கிட்டு, மொத்தம் ரூ. 251 கோடி திங்கள்கிழமை அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். 

இந்நிலையில் தமிழக போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது 

அமைச்சர் அறிவித்திருந்தபடி பண்டிகை முன்பணம் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், தீபாவளி பண்டிகைக்கு பிறகு நமது கோரிக்கை குறித்து அரசு தீவிரமாக பரிசீலிக்கும் என்ற நமபிக்கையிலும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது. 12 தொழிற்சங்கங்களின் கூட்டு ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com