விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

பிரேதப் பரிசோதனை முடிந்து உடல்களை ஒப்படைக்க பணம் கேட்கும் ஊழியர்கள்: பொதுமக்கள் புகார்

மதுரை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வருவோரிடம் மருத்துவமனை ஊழியர்கள் பணம்  மற்றும் தீபாவளி பட்டாசுகள் வாங்கித் தர வலியுறுத்துவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  

News image
Updated On :5 நவம்பர் 2018, 8:18 am IST

மதுரை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வருவோரிடம் மருத்துவமனை ஊழியர்கள் பணம்  மற்றும் தீபாவளி பட்டாசுகள் வாங்கித் தர வலியுறுத்துவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பெரியதும், முக்கிய மருத்துவமனையாகவும் திகழ்ந்து வருகிறது. இங்குள்ள பிணவறைகளில் நாள்தோறும் 20-க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.  பிரேதப் பரிசோதனைக்குத் தேவையான கத்தி, சோப்பு, டெட்டால் போன்ற கிருமி நாசினிகள் உள்ளிட்டவற்றை அரசே வழங்குகிறது. 

இருப்பினும் பிரேதப் பரிசோதனைக்கு உடல்களைக் கொண்டு வரும் உறவினர்களிடம் கத்தி, சோப்பு போன்ற பொருள்களுக்கு பணம் கேட்பதை மருத்துவமனை பணியாளர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். பணம் தர மறுப்பவர்களிடம் உடல்களை மாற்றிக் கொடுக்கும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இதுதொடர்பாக புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. 

இதற்கிடையே, தற்போது பிரேதப் பரிசோதனைக்காக வருவோரிடம் பணம் மற்றும் பட்டாசுகள் வாங்கித் தர வலியுறுத்தும் சம்பவங்களும் நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக அரசு மருத்துவமனைக்கு வருவோர்களிடம் பட்டாசுகள் வாங்கித் தர வலியுறுத்தியும்,  தராவிட்டால் பிரேதப் பரிசோதனை தாமதமாகும் எனவும் ஊழியர்கள் மிரட்டி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.  

இந்நிலையில்,  சனிக்கிழமையன்று பரமக்குடியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக எடுத்து வரப்பட்டது.  அப்போது அங்கிருந்த ஊழியர்கள் சிலர் ராஜேந்திரனின் உறவினர்களிடம் பட்டாசுகள் கேட்டும், பணம் கேட்டும் தொந்தரவு செய்துள்ளனர். கேட்டதைக் கொடுக்கா விட்டால் உடலை ஒப்படைக்க தாமதமாகும் என்று தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து வேறு வழியில்லாமல் ராஜேந்திரனின் உறவினர்களும் ரூ. 1500 மதிப்புள்ள பட்டாசுகளை வாங்கி பிணவறை ஊழியர்களிடம் கொடுத்துள்ளனர்.  இதுதொடர்பாக அங்கு பணியில் இருந்த மருத்துவர் தட்டிக்கேட்ட போதும் அதற்கு ஊழியர்கள் மழுப்பலான பதில்களைக் கூறி தப்பியுள்ளனர். ஊழியர்களுக்கு பட்டாசுகள் வாங்கிக் கொடுக்கும் சம்பவத்தை ராஜேந்திரனின் உறவினர்கள் சிலர் செல்லிடப்பேசியில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக மருத்துவமனை டீன் டி. மருதுபாண்டியனைத் தொடர்பு கொண்டபோது அவர் செல்லிடப்பேசியை எடுக்கவில்லை. இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை அவசியம் என பொதுமக்கள்  வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.