இது சென்னைக்கான புயலோ, மழையோ இல்லை.. நமக்கானது இன்னும் 3 நாட்களில்!

கஜா புயல் குறித்த முன்னறிவிப்புகளும், முன்னெச்சரிக்கைகளும் நமக்கானது கிடையாது. இதன் மூலம் கிடைக்கும் மழை சென்னைக்கு கூடுதல் போனஸ்தான் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
இது சென்னைக்கான புயலோ, மழையோ இல்லை.. நமக்கானது இன்னும் 3 நாட்களில்!
Published on
Updated on
1 min read

கஜா புயல் குறித்த முன்னறிவிப்புகளும், முன்னெச்சரிக்கைகளும் நமக்கானது கிடையாது. இதன் மூலம் கிடைக்கும் மழை சென்னைக்கு கூடுதல் போனஸ்தான் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

இன்று மாலை கரையை கடக்கும், இன்று இரவு கரையை கடக்கும் என்று செய்திகளைப் பார்க்கும் சென்னைவாசிகள், எங்கே மழையையேக் காணோம் என்று வானத்தை ஊற்றுப் பார்த்து சூரிய வெளிச்சம் கண்ணைக் கூசும் போது, வானிலை முன்னறிவிப்புகளை கிண்டல் செய்து கொண்டிருக்கலாம்.

ஆனால், இந்த புயல் சின்னமோ, மழையோ சென்னைக்கானது கிடையாது என்றும், இன்னும் 3 நாட்களில் சென்னைக்கான மழை வரவிருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

இது குறித்து தனது பேஸ்புக்கில் அவர் தெரிவித்திருப்பதாவது, கஜா புயல் காரணமாக சென்னை இன்று காலைதான்  முதல் மழையை சந்தித்தது. தமிழகத்தை கஜா புயல் நெருங்கி வருகிறது. இதனால் இதர மாவட்டங்களிலும் மழை பெய்யும். தமிழகத்தின் உள் மாவட்டங்களான மதுரை, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு, நாளை காலை முதல்தான் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதாவது புயல் கரையைக் கடந்து உள் மாவட்டங்கள் வழியாக பயணிக்கும் போதுதான் அங்கு மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

புயல் சின்னம் தீவிரமடையும் போது அருகில் உள்ள மேகக் கூட்டங்களை நெருக்கமாக வைத்துக் கொள்ளும். எனவே, அடுத்த 16, 17ம் தேதிகளில் மேலும் மழையை எதிர்பார்க்கலாம். இது சென்னைக்கான புயல் கிடையாது. இந்த புயல் காரணமாக சென்னைக்கு எவ்வளவு மழை கிடைத்தாலும் அது சென்னைக்கான போனஸ்தான் என்று தெரிவித்துள்ளார். 

மேலும் சென்னை வாசிகளுக்கு மகிழ்ச்சியான அந்த தகவலையும் இங்கே பதிவு செய்துள்ளார். அதாவது அடுத்த 3 நாட்களில் நமக்கே நமக்கான மழை வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதோடு, புயல் கரையை கடக்கிறது, நாள் முழுக்க மழை பெய்யும் என்ற கனவுகளை எல்லாம் விட்டு விடுங்கள். சென்னையில் இருந்து வெகு தொலைவில் கரையைக் கடக்கவிருக்கிறது. அதே சமயம், சிறு சிறு மேகக் கூட்டங்களால் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளான செம்பரம்பாக்கம், தாம்பரம், கிழக்குக் கடற்கரைச் சாலை, சிறுசேரி பகுதிகளில் பலத்த மழை பெய்யும். எனவே, ஏரி இருக்கும் பகுதிகளில் நல்ல மழை பெய்வதை நினைத்து சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடையலாம் என்றும் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com