மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் சம்மதம் இல்லாமல் ஒப்புதல் கொடுக்க மாட்டோம்: காவிரி ஆணைய தலைவர் தகவல்  

மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் சம்மதம் இல்லாமல் திட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்க மாட்டோம் என்று  காவிரி ஆணைய தலைவர் மசூத் ஹுசைன்  தெரிவித்துள்ளார். 
மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் சம்மதம் இல்லாமல் ஒப்புதல் கொடுக்க மாட்டோம்: காவிரி ஆணைய தலைவர் தகவல்  

புது தில்லி: மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் சம்மதம் இல்லாமல் திட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்க மாட்டோம் என்று  காவிரி ஆணைய தலைவர் மசூத் ஹுசைன்  தெரிவித்துள்ளார். 

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வளத்துறையிடம் தாக்கல் செய்துள்ள அம்மாநில அரசு, புதிய அணை கட்ட ஒப்புதல் வழங்கும்படி கோரியிருந்தது.

இதற்கு கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள சாத்தியக்கூறு அறிக்கை குறித்து பல்வேறு துறைகளிடம் மத்திய அரசு கருத்துகளை கேட்டிருப்பதாக தெரிவித்த அதிகாரிகள், மேகதாது அணை குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரியை கர்நாடக முதல்வர் குமாரசாமி கடந்த சில நாட்களுக்கு முன் சந்தித்து பேசியதாகவும், அப்போது மேகதாது அணை சிக்கல் குறித்து  தமிழக - கர்நாடக முதல்வர்களிடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக நிதின் கட்கரி வாக்குறுதி அளித்ததாகவும் அதிகாரிகள் கூறியிருந்தனர். 

கர்நாடக அரசு அனுப்பியிருக்கும் அறிக்கையை நீர்வளத்துறை பரிசீலிக்கக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். 

இந்நிலையில் செவ்வாயன்று மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தாக்கல் செய்த வரைவு அறிக்கைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.  
அணை கட்டுவது தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள அரசுகளை தங்கள் கருத்தை தெரிவிக்குமாறும்  மத்திய நீர்வள ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. 

உடனே இதற்கு எதிர்வினையாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் முடிவுக்கு தடை விதிக்க வேண்டுமென்று கோரி, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

அதேசமயம் காவிரி ஆறு தொடர்பாக இனி எந்த ஒரு திட்டத்தையும் முன்னெடுத்தால் காவிரி மேலாண்மை வாரியத்தின் சம்மதம் மிகவும் அவசியம் என்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் சம்மதம் இல்லாமல் திட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்க மாட்டோம் என்று  காவிரி ஆணைய தலைவர் மசூத் ஹுசைன்  தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு ஒப்புதல் தரமாட்டோம். காவிரி ஆற்றின் படுகை பகுதிக்குள் மேகதாது அணை வருவதால் மேகதாது அணை திட்ட விவகாரத்தில் ஆணையத்தின் தலையீடு நிச்சயம் இருக்கும். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com