/

சரவெடியாக வரும் சவால்கள்: திக்குத்தெரியாத காட்டில் பட்டாசு தொழில்!

பட்டாசு தொடர்பாக செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுத் தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

News image
Updated On :25 அக்டோபர் 2018, 7:35 am

பட்டாசு தொடர்பாக செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுத் தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

சிவகாசிப் பகுதியில் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் பட்டாசு தயாரிப்பு பணி தொடங்கிய போது, கலர் மத்தாப்பூ, ஓலை வெடி, கம்பி மத்தாப்பூ உள்ளிட்ட சில ரகங்களே தயாரிக்கப்பட்டன. அப்போது பட்டாசு தயாரிக்கப்பயன்படும் வேதிப் பொருள்கள் ஜெர்மன் உள்ளிட்ட வெளிநாடுகளிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இங்கு தொடக்க காலத்திலிருந்து இன்று வரை பட்டாசு கையினால் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. பின்னர் 1996 ஆம் ஆண்டு பட்டாசு தயாரிப்பில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என புகார் எழுந்ததையடுத்து பல தொண்டு நிறுவனங்கள் பட்டாசு வெடிக்கக் கூடாது என போர்க்கொடி தூக்கின.
இதைத் தொடந்து பட்டாசு ஆலைகளில் முற்றிலும் குழந்தைத் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இப்பிரச்னையிருந்து பட்டாசு தயாரிப்பாளர்கள் மீண்டு வந்தபோது, பட்டாசில் ஒலி அளவு அதிகமாக உள்ளது என பூதாகரமாக மற்றொரு பிரச்னை வெடித்தது.இதனையடுத்து மத்திய அரசு மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினர் 125 டெசிபல் சத்தத்துக்கு அதிகமாக பட்டாசு தயாரிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டதால் இத்தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் சீனாவில் புதிய தொழில் நுட்பமாக விண்ணில் சென்று ஒளிசிந்தும் பட்டாசு தயாரிப்பதைப் போல் இங்கும் தயாரிக்கலாம் என கவனம் அதில் திரும்பியதையடுத்து 2000 ஆம் ஆண்டு சில பட்டாசு தயாரிப்பாளர்கள் சீனா சென்று அந்த புதிய தொழில் நுட்பங்களை அறிந்து வந்ததுடன், அங்கிருந்து கைதேர்ந்த தொழிலாளர்களை சிவகாசிக்கு அழைத்து வந்து இங்குள்ள தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்தனர். இந்த வகை பட்டாசுகளுக்கு வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பு இருந்ததால், இவற்றை அதிகம் தயாரிக்க தொடங்கினர். இந்நிலையில் உலக பொருளாதார தாராளமயமாக்கலால் சீன பட்டாசு, இந்திய சந்தையை குறிவைத்ததால் மத்திய அரசு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள பொருள்களில் பட்டாசையும் சேர்த்து கடும் நடவடிக்கையை எடுத்தது.
இந்நிலையில் பட்டாசினால் தில்லியில் காற்றுமாசு ஏற்படுவதாகக் கூறி அங்கு பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதிக்க வேண்டும் என ஒருவர் உச்சநீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில் அங்கு பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதித்ததுடன், தீபாவளி பண்டிகையின் போது காற்று மாசு எந்த அளவுக்கு உள்ளது என அறிக்கை தாக்கல் செய்ய மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டது. 
இதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்கக் கோரி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளும் மூடப்பட்டு போராட்டம் நடைபெற்றது. இதன்பின் தில்லியில் பட்டாசினால் காற்று மாசு ஏற்படவில்லை என கண்டறியப்பட்டு, அந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டது. 
இதையடுத்து காற்றுமாசு ஏற்படுவதை தடுக்க நாடு முழுவதும் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்க வேண்டும் என ஒருவர் உச்சநீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில் செவ்வாய்க்கிழமை அளித்த தீர்ப்பில், பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை போட முடியாது என கூறியதுடன், பேரியம் நைட் ரோட் என்ற வேதிப் பொருளை கலந்து பட்டாசு தயாரிக்க கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் கம்பி மத்தாப்பூ, சாட்டை, பூச்சட்டி உள்ளிட குழந்தைகள் விரும்பும் பட்டாசு தயாரிக்க இயலாது.
மேலும் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் சரவெடி பட்டாசுக்கும் நீதி மன்றம் தடை விதித்துள்ளதுடன், பட்டாசு தயாரிப்புக்கு பெரும்பாலும் மூலப்பொருளாக இருக்கும், அலுமினியபவுடரின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளதால் பட்டாசு தயாரிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. 
இதனிடையே தில்லியில் காற்றுமாசினை தடுக்க பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் அதை தயாரிப்பது குறித்து வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினர் அறிவுரை கூறவும் தெரிவித்துள்ளது. 
இந்த நீதி மன்ற தீர்ப்பால் பட்டாசு தயாரிப்பது என்பது எதிர்காலத்தில் கேள்விகுறியாகி விடும் என பட்டாசு தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: இந்த கட்டுப்பாடுகளால் விருதுநகர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கும். பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். வழக்கமாக தீபாவளி பண்டிகை முடிந்து சில நாள்கள் கழித்து அடுத்த ஆண்டுக்குரிய பட்டாசுகளை தயாரிக்கும் பணி தொடங்கிவிடும். தற்போது நீதி மன்ற தீர்ப்பால் பண்டிகை முடிந்ததும் தயாரிப்பு பணியை தொடங்க இயலாது. இதன் காரணமாக பட்டாசுத் தொழிலும், தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இதில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினர் ஆய்வு செய்து இந்த வேதிப் பொருளை கலந்துமட்டுமே பட்டாசு தயாரிக்க வேண்டும் என கூறும் வரை எவ்விதமான பட்டாசும் தயாரிக்க இயலாது என்றனர்.
பட்டாசுத் தொழில், இதுவரை பல சவால்களை சந்தித்து வெற்றிகரமாக செயல்பட்டு வந்துள்ளது. அதே போல் இந்த சவாலை தயாரிப்பாளர்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை:பட்டாசு வணிகர்கள் வரவேற்பு 
நாடு முழுவதும் ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளதை, தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலர் என்.இளங்கோவன் புதன்கிழமை கூறியதாவது: சென்னையைச் சேர்ந்த பட்டாசு வியாபாரி ஒருவர் ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இதையடுத்து நீதிமன்றம் ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் உச்சநீதி மன்றமும், நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனைக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
விருதுநகர் மாவட்டத்தில் தயாராகும் பட்டாசுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் போது, விற்பனை செய்பவர்கள் பில் வழங்குவது கிடையாது. ஜி.எஸ்.டி. வரி வசூல் செய்வதில்லை. பட்டாசு என்பது வெடிபொருள் என்பதால் உரிய அனுமதி பெற்று பட்டாசு கடை அமைக்கப்படுகிறது. இதனிடையே ஆன்லைனில் பட்டாசு விற்பவர்கள் யாரிடமும் எந்த அனுமதியும் பெறுவதில்லை. பட்டாசு பெட்டிகளில் தயாரிப்பாளர்கள் முகவரி இல்லாமல் பட்டாசு விற்கப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆன்லைனில் விற்பனை செய்பவர்கள் எந்த மாதிரியான பட்டாசுகளை அனுப்பி வைக்கிறார்கள் என்பது தெரியாது.
பிரபல நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்வதில், இந்திய சந்தையில் தடை செய்யப்பட்டுள்ள சீன பட்டாசு இருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வகை பட்டாசுகள் விளையாட்டுப் பொருள்கள் என கப்பல் மூலம் இந்திய சந்தைக்கு வந்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பவர்கள், சீன பட்டாசை விமானம் மூலம் அனுப்புவது என்பது மிகப் பெரிய குற்றமாகும்.
எனவே ஆன்லைன் மூலம் பட்டாசு விற்கப்படுவதை கண்காணிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.