மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

முக்கொம்பு மேலணையில் ஸ்டாலின் ஆய்வு: குடிமராமத்துப் பணிகளில் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் என குற்றச்சாட்டு

அணைப் பாதுகாப்பு குடிமராமத்துப் பணிகளில் ரூ.5 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் குற்றம் சுமத்தினார்.

News image

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் மதகு உடைந்த பகுதியை திங்கள்கிழமை பார்வையிடுகிறார் திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின். 

Updated On :3 செப்டம்பர் 2018, 8:10 pm


அணைப் பாதுகாப்பு குடிமராமத்துப் பணிகளில் ரூ.5 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் குற்றம் சுமத்தினார்.
முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் மதகுகள் உடைந்த பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதி வழியாகச் சென்று உடைந்த பகுதியில் பாறாங்கற்கள் கொட்டப்படும் பணியை திங்கள்கிழமை நேரில் பார்வையிட்ட மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி முக்கொம்பு மதகுகள் போன்ற ஆட்சியாக உள்ளது. 
மேலணையில் உடைந்திருக்கும் மதகுகளை முன்கூட்டியே ஆய்வு செய்திருந்தால் நிச்சயமாக தடுத்திருக்க முடியும். முறையான அறிவிப்பின்றி திடீரென்று தண்ணீரை அதிகளவில் திறந்து விட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசின் அலட்சியத்தால் இந்த கொடுமை நடந்துள்ளது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று தமிழக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்.
ஆக.24ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேலணையை பார்வையிட்டு, தடுப்புகள் அமைக்கும் பணி உடனடியாக முடிக்கப்படும் என உறுதியளித்தார். ஆனால், இன்னும் 40 சதவீத பணிகள் கூட முடியாத நிலையே காணப்படுகிறது. அதுமட்டுமின்றி, காய்ச்சல் சொல்லிக்கொண்டு வருவதில்லை. திடீரென்று வரும் என அறிவுப்பூர்வமான கருத்தையும் முதல்வர் வெளியிட்டுள்ளார். முதல்வர் சொல்வது எதைக் காட்டுகிறதென்றால் ரோம் நகரம் பற்றி எரியும் நேரத்தில் நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போல உள்ளது. காய்ச்சல் சொல்லாமல் வருகிறதா என்பது தெரியவில்லை. ஆனால், கமிஷன் சொல்லிக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. காய்ச்சல் இருக்கிறதோ, இல்லையோ எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கோமா ஸ்டேஜில்தான் இருந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.
மேட்டூர் அணை ஜூலை 19-ஆம் தேதி திறக்கப்பட்டு ஏறக்குறைய 47 நாள்களாகியும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இந்த ஆட்சியைப் பொருத்தவரையில் கமிஷனை தூர்வாருகிறார்களே தவிர, கால்வாய்களை தூர்வாருவது இல்லாத நிலை தொடர்ந்து வருகிறது. ஏறக்குறைய ரூ.5 ஆயிரம் கோடி வரை இதில் ஊழல் நடந்துள்ளது மிகத் தெளிவாக தெரிகிறது. ஊழலும், மணல் கொள்ளையும் நடந்த காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
உடனடியாக இது குறித்து முறையாக விசாரணை நடத்தி உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது நிச்சயமாக இந்த ஆட்சியில் இருக்காது. விரைவில் தமிழகத்தில் திமுக ஆட்சி மலருகிற நேரத்தில் இதற்கு முறையான விசாரணை நடத்தி உரியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கால்வாய்கள் தூர்வாராத நிலை குறித்து மக்களிடம் திமுக தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறது. எங்கெங்கு தூர்வாரப்பட்டு, எவ்வளவு செலவிடப்பட்டது என சட்டப்பேரவையில் கேள்விகள் கேட்டு பட்டியலை கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதுவரை இந்த அரசு மக்களுக்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்றார் அவர்.
ஆய்வின்போது, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என்.சிவா, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சொந்த கிராமமான நாகை மாவட்டம், திருக்குவளையில் உள்ள அவரது பூர்வீக இல்லத்திற்குச் சென்ற மு.க.ஸ்டாலின், அங்குள்ள கருணாநிதியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். 
மேலும், திருவாரூர் மாவட்டம் காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாளின் நினைவிடத்துக்கும் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.