ரூ. 500 கோடியில் கூடுதல் ஏப்ரான்கள்: திருச்சியிலிருந்து அதிகரிக்கும் விமான சேவை

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 500 கோடியில் கூடுதல் ஏப்ரான்கள்( விமான நிறுத்துமிடங்கள்) அமைக்கப்படுவதால் விமான சேவை அதிகரிக்கப்படவுள்ளன.
ரூ. 500 கோடியில் கூடுதல் ஏப்ரான்கள்: திருச்சியிலிருந்து அதிகரிக்கும் விமான சேவை


திருச்சி விமான நிலையத்தில் ரூ. 500 கோடியில் கூடுதல் ஏப்ரான்கள்( விமான நிறுத்துமிடங்கள்) அமைக்கப்படுவதால் விமான சேவை அதிகரிக்கப்படவுள்ளன.
திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் அமைத்தல் மற்றும் பழைய முனையத்தில் விமான நிறுத்துமிடம் (ஏப்ரான்) அமைத்தல் என இரு வேறு பணிகள் தொடங்க இந்திய விமான நிலைய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதுடன் அவற்றுக்கான நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. புதிய முனையம் அமைப்பதற்கான தொகை ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரான் அமைப்பதற்காக ரூ. 500 கோடியை கடந்த மாதம் ஒதுக்கீடு செய்துள்ளது.
அந்த வகையில் தற்போது 4 விமானங்கள் மட்டுமே நிறுத்தும் நிலையில் உள்ள விமான நிலைய ஏப்ரான் (விமானம் நிறுத்துமிடம்) மொத்தம் 17 விமானங்கள் நிறுத்தும் வகையில் தரம் உயர்த்தப்பட வுள்ளன. அதற்கான ஒப்பந்தம் கோரும் பணிகளும் முடிந்துள்ள நிலையில் விரைவில் பணிகள் தொடங்கி அடுத்த 6 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இது குறித்து விமான நிறுவனங்கள் தரப்பில் கூறுகையில், திருச்சியில் விமான நிறுத்துமிடங்கள் மிகவும் குறைவாக இருப்பதால் ஒரே நேரத்தில் சுமார் 4 அல்லது 5 விமானங்கள் மட்டுமே நிறுத்த முடியும் என்ற நிலை இருந்தது. இதனைக் கருத்தில் கொண்ட இந்திய விமான நிலைய ஆணையம் மொத்தம் 17 விமானங்களை நிறுத்தும் அளவுக்கு விமான நிறுத்துமிடம் (ஏப்ரான்) அமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும் இரவு 11மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரையில் எரிபொருள் சலுகை விலையில் வழங்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருச்சியில் விமானங்கள் நிறுத்தம் (பார்க்கிங்) ஏற்படுத்தப்படுவதுடன் மேலும் பல புதிய விமான சேவைகள் திருச்சியில் தொடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றனர்.
திருச்சி சி.ஐ.ஐ. உறுப்பினர் அச்சார்சிங் கூறுகையில், திருச்சியில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நிலையில் அதிக விமான சேவைகள் அவசியம். மேலும் உள்நாட்டு விமான சேவைகள் அதிகரிக்கும் நிலையில் பெங்களூர், ஹைதராபாத் நகரங்களுடன் திருச்சியை இணைக்க முடியும். இதனை கருத்தில் கொண்டு திருச்சியிலிருந்து பெங்களூர், ஹைதராபாத், தில்லி,மும்பை, கொல்கத்தா நகரங்களுக்கு கூடுதல் விமான சேவைகளை வழங்கவேண்டும். இது குறித்து சி.ஐ.ஐ. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிலையில், திருச்சியிலிருந்து பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களை இணைக்கும் வகையில் தினசரி விமான சேவைகளை வழங்க இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. அக்டோபர் முதல்வாரத்தில் இந்த சேவை தொடங்கப்படும். அந்த வகையில் உள்நாட்டு விமான சேவை மேலும் அதிகரிக்கும். அதேபோல மற்றொரு நிறுவனமான ட்ரூஜெட் என்ற நிறுவனம் தில்லியிலிருந்து ஹைதராபாத், பெங்களூர், மற்றும் திருச்சி நகரங்களை இணைத்து இலங்கை தலைநகர் கொழும்பு வரையில் புதிய விமான சேவையை தொடங்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த சேவைகள் டிசம்பர் இறுதியில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
எனவே திருச்சியிலிருந்து வெளி நாட்டு விமான சேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வந்ததுடன், ஐடி நிறுவனங்களை கவரும் வகையில் உள்நாட்டு விமான சேவையிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அடுத்த ஆறு மாதங்களில் ஏப்ரான் பணிகள் முடியும் நிலையில் இன்னும் ஏராளமான உள்நாட்டு விமான சேவைகள் திருச்சி விமான நிலையத்தில் தொடங்கப்படும் என்பதில் ஐயமில்லை.
ஏரோ பிரிட்ஜ்: தற்போது திருச்சி விமான நிலையத்தில் 3 ஆவது ஏரோபிரிட்ஜ் (விமானத்தையும் முனையத்தையும் இணைக்கும் நகரும் வகையிலான அமைப்பு) அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பெரும்பாலான பணிகள் முடிவடைந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் அதுவும் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com