ஏழுமலையான் கோயிலில் குடியரசு துணைத் தலைவர், தமிழக முதல்வர் வழிபாடு

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, திருமலையில் வழிபாடு மேற்கொண்டார். 
தரிசனம் முடித்து திரும்பிய வெங்கய்ய நாயுடுவுக்கு ஏழுமலையானின் படத்தை வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள்.
தரிசனம் முடித்து திரும்பிய வெங்கய்ய நாயுடுவுக்கு ஏழுமலையானின் படத்தை வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள்.


குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, திருமலையில் வழிபாடு மேற்கொண்டார். 
ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக அவர் திருமலைக்கு திங்கள்கிழமை வந்தார். அவர் சாதாரண பக்தர் போல் செவ்வாய்க்கிழமை, வைகுண்டம் காத்திருப்பு அறை வழியாகச் சென்று மகாதுவாரத்தை அடைந்தார். 
அங்கு அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் கோயில் மரியாதை அளித்து வரவேற்றனர். அதன் பின், அவர் கொடிமரத்தை வணங்கியபடி தன் குடும்பத்தினருடன் ஏழுமலையானை வழிபட்டார்.
தரிசனம் முடிந்து திரும்பிய அவருக்கும், குடும்பத்தினருக்கும் தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகர் மண்டபத்தில் வேத ஆசீர்வாதம் செய்வித்து, ஏழுமலையான் பிரசாதம், திருவுருவப்படம், 2019ஆம் ஆண்டின் நாள்காட்டி, கையேடு உள்ளிட்டவற்றை வழங்கினர். அவற்றைப் பெற்றுக் கொண்டு கோயிலை விட்டு வெளியில் வந்த வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நான் குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு ஓராண்டு காலம் முடிவடைந்துள்ள தருவாயில் ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு குடும்பத்தினருடன் வந்துள்ளேன். என் இஷ்ட தெய்வமான ஏழுமலையானின் தரிசனம் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் அளித்துள்ளது. 
நாட்டு மக்கள் அனைவரும் எல்லா நலங்களும், வளங்களும் பெற்று இன்புற்ற வாழ வேண்டும் என்று ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டேன். நாட்டு மக்களுக்கு சேவை புரியத் தேவையான ஆற்றல், தகுதி, பொறுமை உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டேன். பல ஆண்டுகளாக நான் சாதாரண பக்தனாக வந்து ஏழுமலையானை தரிசித்து வருகிறேன். 
உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் மேலோங்கியுள்ளது.
அதனால் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் தங்கள் வருகையை குறைத்துக் கொண்டு சாதாரண மக்கள் ஏழுமலையானை தரிசிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று தேவஸ்தான அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். திருமலைக்கு வந்த தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்னை மரியாதை நிமித்தம் சந்தித்து உரையாடினார் என்றார் அவர்.
தமிழக முதல்வர்
ஏழுமலையானை அஷ்டதளபாத பத்மாராதனை சேவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரிசித்தார்.
அவர் தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை மாலை திருமலைக்கு வந்தார். இரவு திருமலையில் தங்கினார். செவ்வாய்க்கிழமை காலை அவர் குடும்பத்தினருடன் சென்று அஷ்டதளபாத பத்மாராதனை சேவையில் ஏழுமலையானை தரிசித்தார். 
தரிசனம் முடித்துத் திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகர் மண்டபத்தில் ஏழுமலையான் பிரசாதம், திருவுருவப்படம், 2019ஆம் ஆண்டின் நாள்காட்டி, கையேடு உள்ளிட்டவற்றை வழங்கினர். 
கோயிலை விட்டு வெளியில் வந்த அவர் திருமலையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அதன் பின் சேலம் புறப்பட்டுச் சென்றார். 
முதல்வர் பதவியை ஏற்ற பின் எடப்பாடி பழனிசாமி தன் குடும்பத்தினருடன் 3ஆவது முறையாக திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏழுமலையானை தரிசித்து திரும்பிய தமிழக முதல்வருக்கு பிரசாதம் வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள்.
ஏழுமலையானை தரிசித்து திரும்பிய தமிழக முதல்வருக்கு பிரசாதம் வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com