ரபேல் ஊழல் தொடர்பான புத்தக வெளியீட்டுக்கு தேர்தல் அதிகாரிகள் தடை: சி.பி.ஐ (எம்)  கண்டனம் 

ரபேல் ஊழல் தொடர்பான புத்தக வெளியீட்டுக்கு தேர்தல் அதிகாரிகள் தடை விதித்த நடவடிக்கைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
ரபேல் ஊழல் தொடர்பான புத்தக வெளியீட்டுக்கு தேர்தல் அதிகாரிகள் தடை: சி.பி.ஐ (எம்)  கண்டனம் 
Published on
Updated on
2 min read

சென்னை: ரபேல் ஊழல் தொடர்பான புத்தக வெளியீட்டுக்கு தேர்தல் அதிகாரிகள் தடை விதித்த நடவடிக்கைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டையே உலுக்கிய ரபேல் ஊழல் தொடர்பாக ஏற்கெனவே இந்து குழுமத்தலைவர் ராம் அவர்கள் ஏராளமான ஆவணங்களை இந்து பத்திரிகையில் வெளியிட்டார். இந்த ரபேல் ஊழல் சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்த போது இந்த ஆவணங்கள் நீதிமன்ற விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டது. மத்திய அரசும், இந்த ஆவணங்கள் பொய்யானவை என உச்சநீதிமன்றத்தில் மறுக்கவில்லை. இந்த ஆவணங்கள் வெளியான பின்னர், பல ஆயிரம் கோடி ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளது வெளிஉலகத்திற்கு அம்பலமாகி நரேந்திர மோடியும், அவரது அரசும் குற்றவாளிக்கூண்டில்  நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ரபேல் போர் விமான பேரத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகளை தொகுத்து பாரதி புத்தகாலயத்தின் சார்பில் “நாட்டையே உலுக்கும் ரபேல் ஊழல்”  என்ற புத்தக  வெளியீட்டு நிகழ்ச்சி  இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வெளியீட்டு நிகழ்ச்சியில் இந்து என்.ராம் அவர்களும், லெப்டினன்ட் கர்னல் சி.ஆர்.சுந்தர், இயக்குநர் ராஜூ முருகன், எழுத்தாளர் ஜெயராணி ஆகியோர் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. துவக்கத்தில் கவிக்கோ மன்றத்தில் வெளியிட்டு விழா நடத்த அனுமதி கோரிய போது காவல்துறை அனுமதி மறுத்ததால், கேரள சமாஜத்திற்கு இடம் மாற்றி வெளியீட்டு நடைபெற அனுமதி கோரப்பட்டது. அதற்கும் காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர். இறுதியாக இன்று மாலை பாரதி புத்தக வளாகத்திலேயே வெளியீட்டு விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆயிரம் விளக்கு தொகுதி பறக்கும்படை அதிகாரி எஸ்.கணேஷ் மற்றும் இ 3 இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் மதியம் ஒரு மணி வாக்கில் பாரதி புத்தகாலயத்திற்கு வந்து புத்தக வெளியீட்டு விழா நடத்தக்கூடாது எனவும், நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என எழுத்துப்பூர்வமான கடிதம் கொடுத்து விட்டு, புத்தகாலயத்திலிருந்த ரபேல் ஊழல் புத்தகப் பிரதிகள் அனைத்தையும் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளனர். தேர்தல் அதிகாரிகளின் இந்த நடவடிக்கை அராஜகமானதாகும்.

ஏற்கெனவே பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவந்த ரபேல் ஊழல் சம்பந்தமான விவரங்களை தொகுத்து புத்தகமாக வெளியிடுவதற்கு அனுமதி மறுப்பது எந்தவிதமான சட்ட வரைமுறைக்கும் உட்பட்டதல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தேர்தல் ஆணையம் மோடி அரசின் கைப்பாவையாக மாறி செயல்படுவதின் வெளிப்பாடே இந்த அத்துமீறல் நடவடிக்கையாகும். இதை வன்மையாகக் கண்டிப்பதுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி உடனடியாக தலையிட்டு புத்தகத்தை வெளியிடவும், விற்பனை செய்யவும் அனுமதி அளிக்க வேண்டுமெனவும், அத்துமீறி புத்தகங்களை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.  இத்தகைய அத்துமீறல் நடவடிக்கையினை அனைத்து ஜனநாயக சக்திகளும், வாக்காளப் பெருமக்களும் கண்டனக்குரல் எழுப்ப வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com