சபாஷ் சரியான போட்டி: அரக்கோணம் மக்களுக்கு சவாலாக இருக்கும் வேட்பாளர்கள்

சென்னை - பெங்களுரு வழித்தடத்தில் அமைந்திருக்கும் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் பலமான வேட்பாளர்கள் மோதுவதால், யாருக்கு வாக்களிப்பது என்பதில் மக்களுக்கு கடும் சவால் எழுந்துள்ளது.
சபாஷ் சரியான போட்டி: அரக்கோணம் மக்களுக்கு சவாலாக இருக்கும் வேட்பாளர்கள்
Updated on
2 min read


சென்னை - பெங்களுரு வழித்தடத்தில் அமைந்திருக்கும் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் பலமான வேட்பாளர்கள் மோதுவதால், யாருக்கு வாக்களிப்பது என்பதில் மக்களுக்கு கடும் சவால் எழுந்துள்ளது.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் பாமக சார்பில் ஏ.கே. மூர்த்தியும், திமுக சார்பில் கோடீஸ்வர வேட்பாளரான தொழிலதிபர் ஜெகத்ரட்சகனும் போட்டியிடுகிறார்கள்.

அரக்கோணம் (தனி), ராணிப்பேட்டை, சோளிங்கர், ஆற்காடு, காட்பாடி, திருத்தணி ஆகிய ஆறு பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியதே அரக்கோணம் மக்களவைத் தொகுதி. 

இந்த தொகுதியின் அடிப்படைத் தேவைகள் என்ன?

அரக்கோணத்தில் நல்ல சாலை வசதிகள் இல்லை என்பதும், போதிய அளவுக்கு ரயில்கள் இயக்கப்படாததும் அப்பகுதி மக்களின் முக்கியக் குறையாக உள்ளது.

அரக்கோணம் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தற்போது அரக்கோணம் - சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் சுற்றுவட்ட ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வசதி ஏற்படுத்தப்பட்டால் அப்பகுதி மக்களின் இரண்டாவது குறை ஓரளவுக்கு தீர்ந்து விடும்.

இதேப்போல நகரி - திண்டிவனம் ரயில் பாதையை ஏற்படுத்தவும், அவுட்டர் ரிங்ரோடு அமைத்து சாலைப் போக்குவரத்தை சீராக்க வேண்டும் என்கிறார்கள் அரக்கோணம் மக்கள். 

இதில்லாமல் குடிநீர் பிரச்னையும் தற்போது அரக்கோணத்தில் தலைவிரித்தாடுகிறது. 2014 தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ஹரி வெற்றி பெற்று எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த தொகுதியில் 1999 மற்றும் 2009ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்றுள்ளார்.

மத்திய இணை அமைச்சராக இருந்தவர் ஏ.கே. மூர்த்தி என்றாலும்  இந்த தொகுதிக்கு அவர் புதியவர்.  இருவருமே வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். ஜெகத்ரட்சகன் இந்த தொகுதிக்கு மிகவும் பிரபலமானவராக இருக்கிறார். அதே சமயம் ஏ.கே. மூர்த்தி தனது எளிமையால் வாக்காளர்களை ஈர்க்கிறார்.

ரயில் போக்குவரத்தையும், அரக்கோணத்தின் உள் கட்டமைப்பையும் மேம்படுத்துவதாக திமுக வேட்பாளர் உறுதிமொழி அளித்திருக்கும் நிலையில் குடிநீர் பிரச்னையை சரி செய்வதாக ஏ.கே. மூர்த்தி உறுதி அளித்துள்ளார்.

இவர்களுக்கு அடுத்ததாக அரக்கோணம் மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளராக அக்கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டச் செயலர் என்.ஜி.பார்த்திபன் போட்டியிடுகிறார்.

அரக்கோணம் மக்களவைத் தொகுதி முன்னாள் எம்.பி. கோபாலின் மூத்த மகனான இவர் சோளிங்கர் சட்டப்பேரவை தொகுதியில் 2016-இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகி, பின்னர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். 

சோளிங்கர் நகரக் கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவரான என்.ஜி.பார்த்திபன் அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுகவில் இணைந்தவர்.

எனவே மும்முனைப் போட்டியை சந்திக்கும் அரக்கோணம் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,79,961 ஆக உள்ளது. இங்கும் பல தொகுதிகளைப் போல பெண் வாக்காளர்களே அதிகம். 

எனவே, தங்களுக்கு நல்லது செய்வார் என்று இவர்களில் யாரை மக்கள் தேர்வு செய்யப் போகிறார்கள்?  அரக்கோணம் தொகுதி எம்பியாக யார் வெற்றி வாகைச் சூடுவார் என்பதை மே 23 அன்று தெரிந்து கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com