கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று அறிவித்து விட்ட பாஜகவுடன் எதற்கு கூட்டு?: அதிமுகவுக்கு இ. கம்யூ கேள்வி 

கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று அறிவித்து விட்ட பாஜகவுடன் எதற்கு கூட்டு? என்பது குறித்து தமிழக முதல்வர் பதில் சொல்ல வேண்டும் என்று இ. கம்யூ கேள்வி எழுப்பியுள்ளது.
கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று அறிவித்து விட்ட பாஜகவுடன் எதற்கு கூட்டு?: அதிமுகவுக்கு இ. கம்யூ கேள்வி 
Published on
Updated on
1 min read

சென்னை: கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று அறிவித்து விட்ட பாஜகவுடன் எதற்கு கூட்டு? என்பது குறித்து தமிழக முதல்வர் பதில் சொல்ல வேண்டும் என்று இ. கம்யூ கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் திங்களன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டின் நலன்களைக் காப்பாற்ற என்ன செய்யப் போகிறோம் என தனது தேர்தல் அறிக்கையில் அஇஅதிமுக பட்டியல் போட்டுள்ளது. மத்தியில் மோடி ஆட்சியைத் திரும்பக் கொண்டுவரப் போவதாகவும் அது கூறுகிறது. ஆனால் வாக்குப் பதிவு நடப்பதற்கு முன்பாகவே, அதிமுகவின் வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவதில்லை என்று மோடியின் அமைச்சர்கள் கூறிவருகிறார்கள்.

நீட் தேர்வு முறையைக் கைவிட வலியுறுத்தப்படும் என்கிறது அஇஅதிமுக தேர்தல் அறிக்கை. ஆனால் மத்திய அமைச்சரான பியூ~;கோயல் நீட் தேர்வு தொடரும், கறாராக அமலாக்கப்படும் என்று கூறிவிட்டார்.

சேலம் - சென்னை எட்டுவழிச்சாலைத் திட்டம் கைவிடப்படும் என்கிறது அஇஅதிமுக அறிக்கை. ஆனால் மத்திய அமைச்சரான நிதின் கட்கரி, விவசாயிகளை சமாதானப்படுத்தி, பாரத்மாலா பரியோஜன் திட்டத்தின் கீழ் அந்த எட்டு வழிச்சாலை போடப்பட்டே தீரும் என அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டார்.

ஏற்கனவே, காவிரி ஆற்றின் குறுக்காக கர்நாடகத்தில், மேகேதாட்டு அணையைக் கட்டுவதற்கான பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துவிட்டது. அணை கட்டினால் காவிரிக்கு, இப்போது தானாக வந்து கொண்டிருக்கும் மழைநீர் கூட வாராமல் தடுக்கப்பட்டுவிடும்.

தமிழக நலனுக்கான அஇஅதிமுக கோரிக்கைகளை, தேர்தல் முடியும் முன்பே, ஆட்சி அமையும் முன்பே, அமலாக்க முடியாது என்று பாஜக திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

பின்னர், எதற்காக பாஜகவுடன் கைகோர்த்துக் கொண்டு, மோடி ஆட்சியைக் கொண்டுவருவோம் என வீதிவீதியாய் பிரச்சாரம் செய்கிறார் என்பதற்கும், அவரது கூட்டணி ஏன் நீடிக்க வேண்டும் என்பதற்கும் தமிழக முதலமைச்சர் அவர்கள் பதில் கூறுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com