சுஷ்மா ஸ்வராஜ் மறைவு: மு.க.ஸ்டாலின், ராமதாஸ், டிடிவி தினகரன் இரங்கல்

பாஜக மூத்த தலைவரும், வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
சுஷ்மா ஸ்வராஜ் மறைவு: மு.க.ஸ்டாலின், ராமதாஸ், டிடிவி தினகரன் இரங்கல்
Published on
Updated on
2 min read

பாஜக மூத்த தலைவரும், வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

பாஜக மூத்த தலைவரும், வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் (67), உடல்நலக்குறைவு காரணமாக, தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். ஏற்கெனவே கடந்த 2016-இல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்டிருந்த அவர் நலமுடன் இருந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால், தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சுஷ்மா ஸ்வராஜ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தில்,
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னணி தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் மரணமடைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. ஒரு பெண்ணாக, பொதுவாழ்வில் பல உயரங்களை எட்டி, தனக்கு கிடைத்த பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றி பெருமை சேர்த்தவர் சுஷ்மா ஸ்வராஜ்.

அவர் தீடீர் மறைவினால் துயரத்தில் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பாரதிய ஜனதா கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் நேற்றிரவு காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

பாரதிய ஜனதா கட்சியில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர் சுஷ்மா சுவராஜ். ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தில் பிறந்த சுஷ்மா சுவராஜ் கல்லூரி படிப்புகளை முடித்த பின்னர் உச்சநீதிமன்ற  வழக்கறிஞராக பணியாற்றினார். நெருக்கடி நிலை காலத்தில் அப்போதைய தொழிற்சங்கத் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கைது செய்யப்பட்டு, கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட போது, அவருக்காக உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட வழக்கறிஞர்கள் குழுவில் சுஷ்மாவும் இடம்பெற்றிருந்தார். பின்னர் ஜெயப்பிரகாஷ் நாராயண்  தொடங்கிய இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்ற அவர், தமது 25-ஆவது வயதில் ஹரியானா மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். 27-ஆவது வயதில் அம்மாநில ஜனதா தலைவராக நியமிக்கப்பட்ட சுவராஜ், 41-ஆவது வயதில் மத்திய அமைச்சராகவும், தில்லி மாநில முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார்.

வாஜ்பாய், அத்வானி, மோடி உள்ளிட்ட தலைவர்களின் நம்பிக்கைக்குரியவராக சுஷ்மா திகழ்ந்தார். அரசியலில் மிக உயர்ந்த பதவிகளை அடைந்த போதிலும் எளிமையாகவும், மனித நேயத்துடனும் நடந்து கொண்டார். வெளியுறவுத்துறை அமைச்சராக சுஷ்மா பதவி வகித்த கடந்த 5 ஆண்டுகளில்,  வெளிநாடுகளில் தமிழர்கள் சிக்கலில் தவிப்பதாக டுவிட்டர் மூலம் செய்தி தெரிவித்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட நாடுகளின் வெளியுறவுத்துறையினரைத் தொடர்பு கொண்டு, மீட்க நடவடிக்கை எடுத்தார்.

2014-ஆம் ஆண்டில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில், இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பாக பன்னாட்டு விசாரணை நடத்தக்கோரி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா கடுமையாக எதிர்த்தது. இதையடுத்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. குழு 16.07.2014 அன்று சுஷ்மா சுவராஜை தில்லியில் சந்தித்து பேசியது. அதன்  பயனாக அந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இந்தியா வெளியேறிவிட்டது. அவரது மனிதநேயத்துக்கு இன்னும் ஏராளமான உதாரணங்களைக் கூறலாம்.

சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இரு ஆண்டுகளுக்கு முன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். நேற்று காலை வரை திடமாக இருந்து காஷ்மீர் சிக்கல் உள்ளிட்ட அரசியல் மாற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்து வந்த சுஷ்மா சுவராஜ், நேற்றிரவு காலமாகி விட்டார் என்பதை நம்ப முடியவில்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டரில்,
இந்திய அரசியலில் குறிப்பிடத்தக்க பெண் தலைவராகவும்,சிறந்த நாடாளுமன்றவாதியாகவும் திகழ்ந்த திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன்.மிக இளம் வயதிலேயே அரசியலில் உயர்பதவிகளை வகித்த அவர்,  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மீது மிகுந்த மதிப்பும் அன்பும் கொண்டிருந்தார்.  திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com