மகாபாரதத்தை திரும்பவும் சரியாகப் படியுங்கள்: ரஜினிக்கு கே.எஸ்.அழகிரி அட்வைஸ் 

மகாபாரதத்தை திரும்பவும் சரியாகப் படியுங்கள் என்று நடிகர் ரஜினிக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுரை வழங்கியுள்ளார்.
மகாபாரதத்தை திரும்பவும் சரியாகப் படியுங்கள்: ரஜினிக்கு கே.எஸ்.அழகிரி அட்வைஸ் 
Published on
Updated on
1 min read

சென்னை: மகாபாரதத்தை திரும்பவும் சரியாகப் படியுங்கள் என்று நடிகர் ரஜினிக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் திங்களன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு தகுதி அளிக்கும் 370-வது சட்டபிரிவு நீக்கப்பட்டதை மிக நல்லமுறையில் அமித்ஷா செய்திருக்கிறார் என திரு. ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். ரஜினிகாந்த் அவர்களிடமிருந்து இதைப் போன்ற கருத்தினை எதிர்பார்க்கவில்லை. அவருடைய இந்த கருத்தை படித்த பிறகு நான் மிகவும் சோர்வடைந்தேன். ரஜினிகாந்த் இயல்பிலேயே மிகவும் நல்ல மனிதர். யாருக்கும் தீங்கு இழைக்காதவர். ஆன்மீகத்தின் மீது நாட்டம் கொண்டவர். எனவே, அவர் அப்படி சொல்லியிருப்பது ஆச்சரியம் அளித்துள்ளது.

திரு. ரஜினிகாந்த் அவர்கள் ஆன்மீக உணர்வு என்பது மத உணர்வு என தவறாக புரிந்து கொண்டிருக்கிறாரோ என்கிற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. மதம் என்பது ஒரு குறிப்பிட்ட கடவுளையும், அதற்கு ஒரு பெயரையும், அதற்கென்று ஒருசில சடங்குகளையும், ஒருசில விதிமுறைகளையும், அந்த விதிமுறைகளை பின்பற்றாதவர்களை பிற மதத்தவர் என்றும் அல்லது மதவிரோதிகள் என்றும் முத்திரை குத்தி, பகைமை பாராட்டுவது மத உணர்வாகும்.

இன்றைக்கு அமித்ஷாவும், மோடியும் காஷ்மீருக்கு இருந்த சில சிறப்பு சலுகைகளை நீக்கி ஒரு மாநிலத்தை சுத்தம் செய்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், இதை போன்ற சிறப்பு சலுகைகள் ஹிமாச்சல பிரதேசத்திலும், வடகிழக்கில் உள்ள ஏழு மாநிலங்களிலும், கர்நாடகத்தில் உள்ள கூர்க் பகுதியிலும் நடைமுறையில் உள்ளது. எப்படி காஷ்மீரில் இல்லாதவர்கள் அங்கு நிலம் வாங்க முடியாதோ, அதுபோல, மேற்கண்ட இந்த மாநிலங்களிலும் அந்த மாநிலத்தை சாராதவர்கள் நிலம் வாங்க முடியாது. காஷ்மீரத்தில் சிறப்பு சலுகைகளுக்கான 370-வது அரசியல் சட்டப்பிரிவை நீக்கிய மோடி அரசாங்கம் மேற்கண்ட மாநிலங்களில் இதே சிறப்பு சலுகைகளை நீக்காதது ஏன் ? காரணம், காஷ்மீரில் பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள் என்பதுதானே ?

அநீதியை கண்டு சிலிர்த்து எழுகிற நமது கதாநாயகன் பாட்சா அவர்கள் காஷ்மீரத்திற்கு ஒரு நீதி, பிற மாநிலங்களுக்கு ஒரு நீதி என்கிற அமித்ஷாவின் கொள்கைகளை ஏற்றுக் கொள்கிறரா ?

மோடியையும், அமித்ஷாவையும், கிருஷ்ணர் என்றும், அர்ஜூனர் என்றும் ரஜினி அவர்கள் சொல்கிறார். ஆனால், இதில் யார் கிருஷ்ணர்,  யார் அர்ஜூனர் என்று தனக்கு தெரியவில்லை என்றும் கூறுகிறார். நல்லவேளை ரஜினி காந்த் அவர்களுடைய  உள்ளுணர்வு இங்கு வேலை செய்திருக்கிறது. ஏனென்றால், மோடியும், அமித்ஷாவும் துரியோதனனும், சகுனியுமே ஆவார்கள், இவர்கள் கிருஷ்ணரும், அர்ஜூனரும் அல்ல.

பலகோடி மக்களின் உரிமைகளை பறித்தவர்கள் எப்படி கிருஷ்ணரும், அர்ஜூனருமாக இருக்க முடியும். அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களே, தயவு செய்து மகாபாரதத்தை திரும்பவும் சரியாகப் படியுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com