பத்திரிகைகள் பாராட்டி எழுதுவதற்காக பகட்டான திட்டங்களைத் துவக்கி பயனில்லை: முதல்வருக்கு ஸ்டாலின் அட்வைஸ் 

பகட்டான திட்டங்களை  பத்திரிகைகள் பாராட்டி எழுதுவதற்காக துவக்கி எந்தவித பயனும் ஏற்படப் போவதில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பத்திரிகைகள் பாராட்டி எழுதுவதற்காக பகட்டான திட்டங்களைத் துவக்கி பயனில்லை: முதல்வருக்கு ஸ்டாலின் அட்வைஸ் 
Published on
Updated on
2 min read

சென்னை: பகட்டான திட்டங்களை  பத்திரிகைகள் பாராட்டி எழுதுவதற்காக துவக்கி எந்தவித பயனும் ஏற்படப் போவதில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதனன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

‘சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்' துவக்கி வைத்த நேரத்தில், சேலம் பசுமை வழி சாலைத் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து முறையிடுவதற்கு வந்த விவசாயிகளை கைது செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்ட முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தான் ஒரு விவசாயி என்று அடிக்கடி கூறிக்கொள்ளும் முதலமைச்சர், குறையைச் சொல்ல வந்த விவசாயிகளை சிறைப்பிடித்தது அராஜகத்தின் அடையாளமாகவே தெரிகிறது. புதிய தலைமைச் செயலாளர் புடைசூழ சேலத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ள இந்த ‘முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்’, ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்பதை தவிர, அதில் ஏதும் சிறப்போ, மக்கள் குறை தீர்க்கும் நல்ல நோக்கமோ இருப்பதாகத் தெரியவில்லை.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ‘மனுநீதி நாள் முகாம்’ 1969-லேயே துவங்கப்பட்டு - மக்களின் குறைகள் அவ்வப்போது தீர்த்து வைக்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு மாதத்திலும் இரண்டாவது புதன்கிழமை மக்களைத் தேடி, கிராமங்களுக்கு சென்ற அதிகாரிகள் - இந்த மனுநீதி நாட்களை நடத்தி குறைகளுக்கு தீர்வு கண்டார்கள். ‘மக்களைத் தேடி அரசு நிர்வாகம்’ என்பதை முதலில் எடுத்துச் சென்ற ஆட்சி கழக ஆட்சி!

இன்றைக்கு முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி தலைமையில் உள்ள ஆட்சியில் அரசு நிர்வாகமே ஸ்தம்பித்து - ஊராட்சியிலிருந்து தலைமைச் செயலகம் வரை ஊழல் புரையோடி - நிர்வாக இயந்திரம் சரிசெய்ய முடியாத அளவிற்கு முழுவதும் துருப்பிடித்துக் கிடக்கின்ற நேரத்தில் திடீரென்று 'முதலமைச்சர் சிறப்பு குறை தீர்ப்பு திட்டம்' ஒன்று, உருப்படியில்லாமல் விளம்பரத்திற்காக துவங்கப்பட்டுள்ளது. எப்படி ஊழலை மறைக்க மாவட்டங்களைப் பிரித்து 'புதிய மாவட்டங்கள்' என்று கூறுகிறாரோ, அதேபோல் தனது 'நிர்வாகத் தோல்வியை' மறைக்க, இப்போது புதிய 'சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்' கொண்டு வந்திருக்கிறார் எடப்பாடி திரு பழனிசாமி.

நிர்வாக இயந்திரத்தை செம்மைப்படுத்த உறுதுணையாக இருக்கும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை, விஜிலென்ஸ் ஆணையம் எல்லாம் அ.தி.மு.க ஆட்சியில் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது வரும் ஊழல் புகார்களுக்கு அனுமதி பெறுவது, இந்தத் துறைகளுக்கு குதிரைக்கொம்பாக மாறிவிட்டது. லஞ்ச ஊழல் தடுப்புத்துறையிலிருந்து மாற்றப்பட்ட ஐ.ஜி.யை அங்கேயே தொடர வைத்து, இரு எஸ்.பி.,க்கள் மற்றும் இரண்டு டி.எஸ்.பி.,க்களை அதிரடியாக மாற்றி அமைச்சர் திரு ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் வழக்கிலேயே இந்த குளறுபடியும் அராஜகமும் என்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஆகவே, முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி அவர்கள் தன்னால் முடிந்தால் - அரசு நிர்வாகத்தை சீர்செய்ய - அரசு அலுவலகங்களில் - அமைச்சர்கள் மட்டத்தில் உள்ள லஞ்ச லாவண்யங்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற பகட்டான திட்டங்களை, பத்திரிகைகள் பாராட்டி எழுதுவதற்காக துவக்கி எந்தவித பயனும் ஏற்படப் போவதில்லை என்பதை முதலமைச்சர் உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com