வெளிநாட்டுப் பயணத்தின் மர்மங்களை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்: முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் 

தன்னுடைய வெளிநாட்டுப் பயணத்தில் ஒளிந்து கிடக்கின்ற மர்மங்களை, உண்மையான காரணங்களைத் தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெளிநாட்டுப் பயணத்தின் மர்மங்களை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்: முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் 
Published on
Updated on
2 min read

சென்னை: தன்னுடைய வெளிநாட்டுப் பயணத்தில் ஒளிந்து கிடக்கின்ற மர்மங்களை, உண்மையான காரணங்களைத் தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக புதனன்று ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"தொழிலதிபர்களைச் சந்தித்து தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடு செல்கிறேன்” என்று முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் 14 நாள் சுற்றுப்பயணமாக வெளிநாடு செல்லும் முன்பு இன்று பேட்டியளித்திருப்பது 'கேழ்வரகில் நெய் வடிகிறது, கேளுங்கள்' என்ற நமது நாட்டுப்புற முதுமொழியைப் போல போலிருக்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது 'முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு' 2015 செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10 தேதி ஆகிய இரு நாட்கள் நடத்தப்பட்டது. 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த முதலீடுகள் இதுவரை தமிழகத்தை எட்டிப் பார்க்கவே இல்லை.

பிறகு, திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சரான பிறகு 'இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு' 2019 ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு திரட்டி விட்டதாக, ஜெயலலிதாவை விட ஒருபடி மேலே போய், ஆடம்பரமாக விளம்பரம் செய்யப்பட்டது.

இந்த இரு மாநாடுகளிலும் போடப்பட்ட 402 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வரப் போவதாகச் சொன்ன 5.42 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வந்ததா? இல்லவே இல்லை! முதலீடு அறிவிப்புகள் கானல் நீராகிவிட்டது. வெற்று விளம்பரச் செலவுதான் மிச்சம்! புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட தொழிலதிபர்களிடம் இந்த முதலீடுகளைப் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டதா? அதுவும் இல்லை.

இது குறித்து ஒரு 'வெள்ளை அறிக்கை' தாக்கல் செய்யக்கோரி மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் தொடர்ந்து நான் வலியுறுத்தியும், இதுவரை திரு. எடப்பாடி பழனிசாமியால் ஒரு விளக்கம் சொல்ல முடியவில்லை.

“முதலீடுகள் பெறுவதற்குச் செல்லும் என் வெளிநாட்டுப் பயணத்தைக் கொச்சைப்படுத்துவதா? “என்று கேட்டிருக்கிறார் முதலமைச்சர். நான் கேட்பது ஒரேயொரு கேள்விதான்.

இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்பு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. மணிகண்டன், தொழில்துறை அமைச்சர் திரு. எம்.சி. சம்பத், ஊரகத் தொழில்துறை அமைச்சர் திரு. பெஞ்சமின் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் துறைச் செயலாளர்களுடன் 'படை, படையாக' வெளிநாட்டிற்கு, ரத கஜ துரக பதாதி போல், அரசு செலவில் சென்றார்கள். “உலக முதலீட்டாளர்களைக் கவருவதற்காக நாங்கள் செல்கிறோம்” என்று அறிவித்தார்கள். அப்போதே முதலமைச்சரும் போயிருந்தால் - அது வேறு விஷயம். ஆனால் உலக முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்து ஏழு மாதங்கள் கழித்து முதலமைச்சர் வெளிநாடு போவது ஏன்?  இதுதான் என் கேள்வி.

“மு.க.ஸ்டாலின் மட்டும் ஏன் அடிக்கடி வெளிநாடு செல்கிறார்” என்று இன்னொரு கேள்வி எழுப்பியிருக்கிறார் திரு. எடப்பாடி பழனிசாமி. துணை முதலமைச்சராக இருந்த நேரத்தில் நான் அரசுமுறை பயணமாக வெளிநாடு சென்றிருக்கிறேன். ஆனால், அப்போது நான் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கும், மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் நிதியுதவி பெற்று வந்திருக்கிறேன்.

என்னுடைய தனிப்பட்ட பயணங்கள் எல்லாம் வெளிப்படையானவை. குடும்பத்தினருடன் செல்லும் சொந்தப் பயணங்களுடன், அரசுமுறை பயணமாகப் போவதை திரு. எடப்பாடி பழனிசாமி ஒப்பிடுவது ஒரு முதலமைச்சருக்கு அழகல்ல; ஒப்பீடும் முறையானது இல்லை.

ஆகவே, 'நான் வெளிப்படையாக வெளிநாடு செல்வதை மர்மம்' என்று கூறும் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி,  தன்னுடைய வெளிநாட்டுப் பயணத்தில் ஒளிந்து கிடக்கின்ற மர்மங்களை - உண்மையான காரணங்களைத் தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்; ஏற்கனவே தமிழக மக்களிடையே பரவியிருக்கும் சந்தேகங்களுக்கு நேர்மையாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதைவிடுத்து, திசைதிருப்பும் முயற்சியினால் தினை அளவு நன்மையும் விளையாது என்ற அரிச்சுவடியைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com