
மதுப் பழக்கத்தில் இருந்து மீட்க மருந்து கொடுத்த மனைவிகளை கணவன் அடித்ததில், முதல் மனைவி உயிரிழந்தார். இரண்டாவது மனைவி கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொலை செய்த கணவனை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர், கருவம்பாளையம், ஏபிடி சாலை அருகே வசித்து வருபவர் ரமேஷ் (40). இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இவர் முதல் மனைவி சாந்தி (33), இரண்டாவது மனைவி திலகவதி (30) மற்றும் குழந்தைகளுடன் ஒன்றாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த ரமேஷ், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு தனது முதல் மனைவி சாந்தி உயிரிழந்துவிட்டதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். அப்போது, சட்டையில் ரத்தக் கறை இருந்ததால் சந்தேகம் அடைந்த போலீஸார் அவரை அழைத்துக் கொண்டு கல்லூரி சாலையில் உள்ள அவரது இறைச்சிக் கடைக்குச் சென்றனர்.
அங்கு கை, கால்கள் கட்டப்பட்டு பலத்த காயங்களுடன் இரண்டாவது மனைவி திலகவதி கிடந்ததும், அவரது அருகிலேயே முதல் மனைவி சாந்தி உயிரிழந்து கிடந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார் ரமேஷிடம் விசாரணை நடத்தினர். ரமேஷுக்கு உள்ள மதுப் பழக்கத்தை நிறுத்த மனைவிகள் இருவரும், ஒவ்வொரு முறையும் ரமேஷ் மது அருந்திவிட்டு வரும்போது, அவருக்குத் தெரியாமல் பேதி மாத்திரையை உணவில் கலந்து கொடுத்துள்ளனர். அப்போது, மது அருந்தினால் வயிற்றுப் போக்கு ஏற்படும் எனக் கூறி வந்துள்ளனர். இது குறித்து தெரிந்து கொண்டு மனைவிகளிடம் ரமேஷ் கேட்டபோது, பேதி மாத்திரையை உணவில் கலந்து கொடுத்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
இதனால், கோபமடைந்த ரமேஷ், கடந்த 3 நாள்களாக இருவரையும் கட்டி வைத்து அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவும் இருவரையும் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சாந்தி உயிரிழந்துள்ளார். மேலும், இரண்டாவது மனைவி திலகவதியும் பலத்த காயமடைந்தது தெரியவந்தது. இதனை மறைக்க மூச்சுத் திணறலால் மனைவி உயிரிழந்ததாக ரமேஷ் நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து, ரமேஷ் கைது செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.