
திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் வகையில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு பகுதியில் தயாரிக்கப்படும் மகத்துவம் வாய்ந்த பொருட்களை கௌரவிக்கவும், அதன் தனித்துவத்தை பாதுகாக்கும் வகையிலும் அப்பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இதற்காக புவிசார் குறியீட்டு பொருட்கள் சட்டம் 2003 அமல்படுத்தப்பட்டது.
அந்த வகையில், நம் நாட்டில் தயாரிக்கப்படும் சிறப்பு வாய்ந்த, தனி அடையாளம் கொண்ட பொருட்கள் புவிசார் குறியீடு சட்டத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தில் ஒரு பொருள் இடம்பெற்றுவிட்டால், அந்த பொருளின் பெயரை வேறு பகுதியில் உற்பத்தியாகும் அல்லது தயாரிக்கப்படும் பொருளுக்கு பயன்படுத்தக் கூடாது என்பது விதியாகும். இதன் மூலம் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை போலியாகத் தயாரிக்க சட்டப்படி தடை விதிக்கப்படுகிறது.
அந்த வகையில், தற்போது திண்டுக்கல்லில் தயாரிக்கப்படும் பூட்டு மற்றும் காரைக்குடியில் உற்பத்தி செய்யப்படும் கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே காஞ்சிபுரம் பட்டு, விருப்பாச்சி வாழைப்பழம், கொடைக்கானல் மலைப்பூண்டு, ஈரோடு மஞ்சள், தஞ்சாவூர் ஓவியம், தலையாட்டி பொம்மை, பத்தமடை பாய், மதுரை மல்லி, பழநி பஞ்சாமிர்தம் என 30 பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது திண்டுக்கல் பூட்டு மற்றும் கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பதன் மூலம், தமிழகத்தில் இதுவரை புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.