
சென்னை: கொடநாடு விவகாரம் தொடர்ச்சியாக தன் மீது குற்றச்சாட்டு கூறி வரும் 'தெஹல்கா' பத்திரிக்கை ஆசிரியர் மேத்யூஸ் மீது ரூ.1.10 கோடி கேட்டு, முதல்வர் பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு நுழைந்த மர்ம கும்பல் அங்கிருந்த காவலாளியைக் கொலை செய்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் சயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சயன் மற்றும் மனோஜ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கொடநாடு சம்பவம் தொடர்பாக தெஹல்கா பத்திரிகையின் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் ஜாமீனில் வெளியே வந்துள்ள சயன் மற்றும் மனோஜ் சில கருத்துகளைத் தெரிவித்தனர். அந்த கருத்துகள் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, அதிமுக சார்பில் அளித்த புகாரின் அடிப்டையில், சயன், மனோஜ் ஆகிய இருவரையும் சென்னை மத்திய குற்றப்பரிவு போலீஸார் தில்லியில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றம், சயன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரையும் சிறையில் அடைக்க போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி இருவரையும் சிறையில் அடைக்க மறுத்துவிட்டது. மேலும் சயன் மற்றும் மனோஜ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டது.
புதனன்று சென்னை வந்திருந்த மேத்யூஸ் சாமுவேல், கொடநாடு விவகாரம் தொடர்பாக பழனிசாமி மீதான குற்றச்சாட்டுக்கான கூடுதல் ஆதாரங்களை சரியான நேரத்தில் வெளியிடுவேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் மேத்யூஸ் மீது ரூ.1.10 கோடி கேட்டு, முதல்வர் பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கினை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று முதல்வர் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டதை ஏற்று, வியாழனன்று வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.