சேவை ரயிலா, சேவல் ரயிலா? கேள்விக்குறியாகும் பயணிகள் நலன்...

தமிழகத்திலிருந்து வட மாநிலங்களுக்கு செல்லும்  விரைவு ரயில்களில், விதிகளை மீறி பயணிகள் பெட்டிகளில் சேவல்களை கொண்டு செல்லும் வழக்கம்  அதிகரித்துள்ளது.
சேவை ரயிலா, சேவல் ரயிலா? கேள்விக்குறியாகும் பயணிகள் நலன்...


திருச்சி:  தமிழகத்திலிருந்து வட மாநிலங்களுக்கு செல்லும்  விரைவு ரயில்களில், விதிகளை மீறி பயணிகள் பெட்டிகளில் சேவல்களை கொண்டு செல்லும் வழக்கம்  அதிகரித்துள்ளது. வருவாய் ஒன்றை மட்டுமே இலக்காகக் கொண்டு  ரயில்வே துறையும் அனுமதிப்பதால்  பயணிகளுக்கு அசௌகரியம்  ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழகத்திலிருந்து வட மாநிலங்களை இணைக்கும்  வகையில் பல்வேறு துரித, வாராந்திர ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றுள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் தோறும் திருச்சியிலிருந்து ஹெளரா  (கொல்கத்தா) வரை  இயக்கப்படும் வாராந்தர விரைவு ரயிலும் ஒன்று. 

இந்த ரயிலில், தமிழகப் பகுதிகளில் வாங்கப்படும் சண்டைச்  சேவல்கள் பயணிகளோடு பயணியாக பயணித்து வருகின்றன. இவற்றை ரயில்வே அதிகாரிகளே அபராதம் விதித்து  அனுமதித்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

ரயில்வே துறை சேவைப் பிரிவு (சர்வீஸ் செக்டார்) எனக்  கூறப்படுவதுண்டு. ஆனால் அண்மைக்காலங்களாக சேவையை மறந்து வருவாயை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு  ரயில்வே துறை இயங்கி வருவதற்கு பல்வேறு உதாரணங்களைக் கூற முடியும். 

பயணச்சீட்டுகள் சோதனை செய்யும் பறக்கும்படையினர்  மற்றும் ரயில்களிலேயே பணியாற்றும் பயணச்சீட்டு பரிசோதகர்கள் (டி.டி.இ)  போன்ற அதிகாரிகளும் இதனால் சொல்லமுடியாத தர்ம சங்கட நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.  

அவர்களுக்கு அபராதம் வசூலிக்க  வாய்மொழி உத்தரவாக  மாதம் தலா ரூ. 1.50 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும்  கூறுகின்றனர் பெயர் வெளியிட விரும்பாத சில அதிகாரிகள். 

ரயில் பயணங்களின்போது, குறிப்பிட்ட சில  வகையான பொருள்களை 2 ஆம் வகுப்பு பார்சல் வசதியுடன் கூடிய பெட்டிகளில் எடுத்துச் செல்லவும், பிரத்யேகமாகவும் பார்சல் பெட்டிகளில் எடுத்துச் செல்லவும் வழி வகையுண்டு. ஆனால் அவ்வாறு எடுத்துச் செல்லப்படும் பொருள்களுக்கு பிரத்யேகமாக பார்சல் கட்டணம் செலுத்த வேண்டும்.  

அந்த வகையில் இதுபோன்று சேவல்களையும் பார்சல் கட்டணம் செலுத்தி, பார்சல் வசதியுடன்  கொண்டு செல்லலாம்.  அவற்றுக்கு கட்டணமும் குறைவு. ஆனால் சேவல்களைக் கொண்டு செல்ல அந்த முறையை ரயில்வே அதிகாரிகள்  விடுத்து, பயணிகளுடன் கொண்டு செல்வதை ஊக்குவித்து வருகின்றனர். 

பார்சல் முறையில் சேவல்களைக்  கொண்டு செல்ல ரூ.  280 முதல் 320 மட்டுமே ஆகும். ஆனால் பயணிகளோடு சேவல்களைக் கொண்டு செல்ல  ஒரு சேவலுக்கு, டிக்கெட் கட்டணத்துடன்  ரூ. 570 முதல் 600  வரையில் அபராதக் கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு தமிழகப் பகுதியிலிருந்து கொண்டு செல்லப்படும் சேவல்கள், வடமாநிலப் பகுதிகளில் பிரபலமாகி வரும் சேவல் சண்டைகளுக்கு பயன்படுத்துவதற்காக கொண்டு  செல்லப்படுகின்றன. ஒரு சேவல்  சுமார் ரூ. 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையில் வாங்கப்பட்டு, சுமார்  20 முதல் 40 ஆயிரம் ரூபாய் வரையில் விற்கப்படுகின்றன. 

இவற்றை வடமாநிலங்களிலிருந்து தமிழகத்தில்  வந்து தொழிலாளர்களாகப் பணியாற்றுவோர், தங்களது ஊர்களுக்குச் செல்லும்போது கொண்டு செல்வதை  வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும் இதையே முழு நேரத் தொழிலாகவும் பலர் மேற்கொண்டு  வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜன. 25  வெள்ளிக்கிழமை மாலை 4.20-க்கு திருச்சியிலிருந்து புறப்பட்ட ஹெளரா ரயிலில், குடியரசு தின பாதுகாப்பு கெடுபிடிகளால் வழக்கத்தைவிட குறைவாக சேவல்கள் கொண்டு செல்லப்பட்டன. கடந்த வாரம் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வருகையால் முற்றிலுமாக பயணிகள் ரயில் பெட்டியில் சேவல்கள் தடைசெய்யப்பட்டு, சுமார் 100-க்கும் மேற்பட்ட சேவல்கள் பார்சல் பெட்டியில் அனுப்பி வைக்கப்பட்டன.

இவ்வாறு சேவல்களை முன்பதிவு பயணிகள் பெட்டியில் ஏற்றிச் சென்ற கொல்கத்தா இளைஞர்கள் பிரபுமதன், அனுப்குமார் உள்ளிட்டோர் கூறுகையில், தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் சேவல்கள், வடமாநிலங்களில் பிரபலம். 

ஈரோடு, பெருந்துறை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வாங்கிச் செல்லப்படும் சேவல்களில் பயிற்சிபெற்ற அனுபவமுள்ள சேவல் விலை அதிகம். புதியது விலை குறைவு. நாங்கள் இவற்றைக் கொண்டு செல்ல ரூ. 4,000 வரை செலவாகிறது. அவற்றை 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை விற்கலாம். 

ரயிலில் டிக்கெட் எடுத்து, அபராதமும் செலுத்திக் கொண்டு செல்வதால் எங்கள் அருகிலேயே வைத்துப் பாதுகாப்பாக கொண்டு செல்ல முடியும். டிடிஇ அபராதம் செலுத்திவிட்டால் ஏதும் சொல்வதில்லை. வெள்ளி புறப்படும் இந்த ரயில் ஞாயிறு கொல்கத்தா சென்றடையும், அதுவரை சேவலுக்குத் தேவையான உணவு, தண்ணீர் போன்றவையும் வைத்துள்ளோம். இருக்கைகளுக்கு கீழே கட்டிவிடுவோம் என்றனர். இது  ரயில்களில் முன்பதிவு செய்து செல்லும் சக பயணிகளுக்கு மிகவும் அசௌகரியமாக உள்ளதாக பயணிகள் தெரிவித்தனர். 

ரயில் திருச்சியிலிருந்து புறப்பட்டு அரியலூரைக் கடந்த பின்னரே ( மாலை 5 மணிக்கு பின்னர்) சேவல்கள் கூவத் தொடங்கி விடுமாம். ஒரு சேவல் கூவினால் போதும் மற்ற சேவல்களும் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக கூவத் தொடங்கி விடுமாம். மறுநாள் அதிகாலை 4 மணிக்கெல்லாம் அனைத்து சேவல்களும் கூவி, சத்தம் போட்டு பயணிகளை எழுப்பி விடுமாம். இதனால் ரயில் பயணம் கிராமிய வாசத்துடன் செல்கிறது என்கின்றனர்.

மேலும் இந்த 3 நாள்களிலும் சேவல்கள் ரயில் பெட்டிகளில் அசுத்தம் செய்து விடுவது மேலும் அசௌகரியக் குறைவு என்கின்றனர். பல நேரம் சேவலை கொண்டு செல்வோர் கழிவுகளைச் சுத்தம் செய்தாலும் சில நேரங்களில் முடிவதில்லை. இதனால் சுகாதாரமற்ற நிலை நிலவுகிறது.

மேலும் அலர்ஜி உள்ள பயணிகள் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு பயணிப்பதாகவும் கூறப்படுகிறது. திருச்சியிலிருந்து வாரந்தோறும் நூற்றுக்கணக்கான சேவல்கள் கொண்டு செல்லப்படுகின்றன. சென்னைக்கு இந்த ரயில் சென்றதும், அங்கிருந்து மேலும் ஏராளமான சேவல்கள், அதிக எண்ணிக்கையிலாண பயணிகள் முன்பதிவு பெட்டிகளில் பயணிப்பதாகவும் கூறப்படுகின்றது. 

1 ஹவுரா விரைவு ரயிலைப் பொருத்தமட்டில் பயணிகள் நலனில் அக்கறையில்லை என்ற புகார் அதிகரித்து வருகிறது. தற்போது புதிய நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட புதிய ரயில் பெட்டிகளில் பயணிகளைவிட பிராணிகளே அதிக சொகுசாக பயணித்து வருவதாகக் கூறப்படுகிறது.  

2 டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் பறக்கும் படையினருக்கு, மாதம் தலா ரூ. 1.50 லட்சம் அபராதத் தொகையாக வசூலிக்க வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவு போடப்பட்டுள்ளதால், டிடிஇ பணியில் உள்ளோர் சொல்லமுடியாத நிலையில் உள்ளனர்.  சக பயணிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை. 

3 சேவல்களைக் கொண்டு செல்வோர் டிக்கெட் முன்பதிவின் போது, சேவல்களுக்கு பெயர் வைத்து, அவற்றுக்கும் சேர்த்து முன்பதிவு பயணச்சீட்டு பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த விவரம் தெரிந்தும், வருவாய் இலக்கு உள்ளதால் பரிசோதகர்கள் ஏதும் செய்ய முடிவதில்லை.

4 வட மாநிலங்களில் கொல்கத்தா, ஹவுரா மற்றும் ஒடிசா, பிகார் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக சேவல்களுக்கு அதிக கிராக்கியாம். பயிற்சி அளிக்கப்பட்டவை ரூ. 40 ஆயிரம் வரையிலும் புதியவை ரூ. 10-15 ஆயிரம் வரையிலும் விற்கப்படுகின்றதாம். 

5 சில நேரங்களில் ரயில்வே அதிகாரிகள் நிலையத்தை விட்டு வெளியே வந்து, சேவல்களுடன் வருவோரை பிடித்து அபராதம் விதித்து தங்கள் சார்பில் வருவாய் அதிகரிப்பை அதிகரித்து வருகின்றனர். சில நேரம் மத்திய பேருந்து நிலையத்துக்கும் சென்று அங்கேயே வியாபாரிகளைப் பிடித்து அபராதம் விதிப்பதும் நடைமுறையில் உள்ளது.

6 கொல்கத்தாவைச் சுற்றியுள்ள பரிபடா, அங்குல், கோரபட், களகஹண்டி, ரேக்கடா, பலாங்கிர், மல்கங்கிரி, பௌத், சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் சேவல் சண்டை பிரபலமாம். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போல வடமாநில பகுதிகளில் சேவல் சண்டைகள் பிரபலமாகி வருவதுடன், அதற்கு (பெட்) பந்தயங்களும் லட்சக்கணக்கில் கட்டப்படுமாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com