மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் நான்காவது வேட்பாளர் மனு தாக்கல் செய்திருப்பது மதிமுக தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
தேசத்துரோக வழக்கில் தண்டனை பெற்றுள்ள வைகோவின் மனு தள்ளுபடி செய்ய வாய்ப்பு இருப்பதால், இந்தக் கடைசி நேர நகர்வை திமுக செய்திருக்கிறது.
இது திமுக-வுடன் ஏற்கெனவே செய்துகொண்ட எழுதப்படாத உடன்பாடுதான் என வைகோ கூறினாலும், மதிமுக தொண்டர்களிடையே திமுகவின் இந்த நகர்வு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், அதிமுகவுக்கு 3 இடங்களும், திமுகவுக்கு 3 இடங்களும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மக்களவைத் தேர்தலின்போது செய்துகொண்ட உடன்பாட்டின் அடிப்படையில், திமுகவின் 3 இடங்களில் ஓரிடம் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. மதிமுகவின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை அவர் சட்டப்பேரவைச் செயலரிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
இதற்கிடையே, திமுக ஆட்சிக் காலத்தில் 2009 -ஆம் ஆண்டு வைகோ மீது தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கை விசாரித்து வந்த சென்னை சிறப்பு நீதிமன்றம், அந்த வழக்கில் வைகோ குற்றவாளி என உறுதி செய்ததோடு அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும்,
ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
இதன் காரணமாக, அவர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வைகோவுக்கு எந்தத் தடையும் இல்லை. அவருக்கு ஓராண்டுக்கு மட்டுமே சிறை தண்டனை வழங்கப்பட்டிருப்பதால், அவருடைய மனுவைத் தள்ளுபடி செய்ய வாய்ப்பில்லை என மதிமுக தரப்பில் கூறப்படுகிறது.
அதேநேரம், சட்டத்தின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட வைகோவுக்கு தகுதி இருந்தபோதும், தேசத் துரோக வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கும் அவருடைய வேட்பு மனுவை, தேர்தல் நடத்தும் அதிகாரி தார்மிக அடிப்படையில் தள்ளுபடி செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது என சில அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தேசத்தின் இறையாண்மையைப் பாதுகாப்பேன் என்று உறுதிமொழி எடுக்க இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் தேசத் துரோகக் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்தால், அது அரசியல் சாசனத்துக்கே முரணாக அமையாதா என்பது அவர்கள் எழுப்பும் கேள்வி. இதன் காரணமாக, வைகோவின் வேட்புமனு ஏற்கப்படுமா, வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆவாரா என்பன உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன.
இந்தச் சூழலில், ஒருவேளை வைகோவின் மனு ஏற்கப்படாவிட்டால் , அவருக்கு பதிலாகப் போட்டியிட திமுகவைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோவை நான்காவது வேட்பாளராக திமுக நிறுத்தியுள்ளது. அவர், திங்கள்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
வைகோ விளக்கம்: இதுகுறித்து திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, சட்டப்படி எனது வேட்புமனு நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இருந்தபோதும், எனது வேட்புமனு நிராகரிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதால், முன்னெச்சரிக்கையாக மாற்று ஏற்பாட்டை செய்துகொள்ளுமாறு திமுக தலைவர் ஸ்டாலினிடம் நானே கூறினேன். அதனடிப்படையில்தான், திமுக சார்பில் என்.ஆர். இளங்கோ நான்காவது வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். மனு பரிசீலனையின் முடிவில் எனது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டால், என்.ஆர்.இளங்கோவின் வேட்புமனு திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும் என திமுக சார்பில் கூறப்பட்டிருக்கிறது.
மக்களவைத் தேர்தல் உடன்பாட்டின்போது மாநிலங்களவைத் தேர்தலில் நானே போட்டியிடுவதாக இருந்தால் மட்டுமே ஓர் இடம் மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் என திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதை நானும் ஏற்றுக்கொண்டேன். இது எழுதப்படாத உடன்பாடு. அதனடிப்படையிலேயே திமுக முடிவை எடுத்துள்ளது என வைகோ விளக்கம் அளித்தார்.
ஆனால், வைகோவின் அந்த விளக்கம் மதிமுக தொண்டர்களைத் திருப்திப்படுத்தியிருப்பதாகத் தெரியவில்லை. திமுகவின் நகர்வு மதிமுக தொண்டர்களை மட்டுமின்றி, உயர்மட்ட நிர்வாகிகள் சிலரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
அரசியல் களத்தில் வைகோ எடுக்கும் இதுபோன்ற பல முடிவுகள், அக் கட்சியினரை அதிருப்தியடைய செய்திருப்பது இது புதிதல்ல. இதனால், முக்கிய நிர்வாகிகள் பலர் அக் கட்சியிலிருந்து தொடர்ந்து வெளியேறியும் வருகின்றனர்.
கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது அதிமுகவுடன் கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுக, தொகுதி பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையால் கூட்டணியில் இருந்து விலகியதோடு, தேர்தலையும் புறக்கணித்தது. இதனால் வைகோ மீது கட்சி நிர்வாகிகள் அப்போதே கடும் அதிருப்தி அடைந்தனர். சிலர் கட்சியிலிருந்தும் வெளியேறினர்.
2016 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி தொடர்பாக வைகோ எடுத்த முடிவு, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் விளைவாக காஞ்சிபுரம், சேலம் மாவட்டச் செயலாளர்கள், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் ஆகியோர் கட்சியில் இருந்து விலகினர்.
அதுபோல, நடந்துமுடிந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் செய்துகொண்ட ஒப்பந்தமும் அக் கட்சியினரிடையே அதிருப்தியையே ஏற்படுத்தியிருந்தது. திமுகவுடன் கூட்டணி வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 மக்களவை இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், கூட்டணியில் அங்கம் வகித்த மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும் ஒரு மாநிலங்களவைத் தொகுதியும் மட்டுமே ஒதுக்கப்பட்டன.
அப்போதே மதிமுக தொண்டர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் தரும் முடிவை நாங்கள் அனைவருமே வரவேற்கிறோம். ஆனால், மக்களவையில் ஒரே ஒரு தொகுதிக்கு எப்படி உடன்படலாம்?
இதே திமுக கூட்டணியில் 1999-ல் 5 தொகுதிகள், 2004-ல் 4 தொகுதிகளில் மதிமுக போட்டியிட்டது. வழக்கமாக 2 தொகுதிகளில் போட்டியிடும் இடதுசாரிகளுக்கு அதே எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
குறைந்தபட்சம் இரண்டு மக்களவை, ஒரு மாநிலங்களவை என 3 தொகுதிகளையாவது மதிமுகவுக்கு திமுக வழங்கியிருக்க வேண்டும், என்று அப்போதே ஆதங்கம் தெரிவித்தனர். முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இந்தக் கருத்துக்களைப் பதிவிட்ட மதிமுக நகரச் செயலாளர் பாலு உள்ளிட்ட சில நிர்வாகிகள் கடும் அதிருப்தியை தெரிவித்துவிட்டு, கட்சியிலிருந்தும் வெளியேறினர்.
வைகோவின் மனு நிராகரிக்கப்பட்டால், அவருக்குப் பதிலாக மதிமுகவில் யாருக்காவது அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது திமுக வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்தச் சூழலில், ஒதுக்கப்பட்ட ஓரிடத்திலும் வைகோவுக்குப் பதிலாக மாற்று வேட்பாளரை மதிமுகவிலிருந்து நிறுத்த அனுமதிக்காமல், திமுக சார்பில் நிறுத்தப்பட்டிருப்பது மதிமுக தொண்டர்களிடையேயும், நிர்வாகிகளிடையேயும் மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
திமுகவின் வாரிசு அரசியலை எதிர்த்தும், மு.க. ஸ்டாலினுக்குத் தரப்பட்ட முக்கியத்துவத்தை எதிர்த்தும்தான் மதிமுக தொடங்கப்பட்டது. திமுகவிலிருந்து வைகோ நீக்கப்பட்டதைத் தொடர்ந்து பல இளைஞர்கள் அவருக்காகத் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தனர். இப்படி ஒட்டு திமுகவாக செயல்படுவதைவிட, மதிமுகவைக் கலைத்துவிட்டு திமுகவில் இணைந்து விடலாம் என்று மதிமுகவில் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்

‘டெக்’ துணுக்குகள்..

சென்னை: 16 தொகுதிகளில் 24.21 லட்சம் போ் வாக்களிப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


