லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன காசாளரின் மரணம் கொலையே: பிரேத பரிசோதனையில் உறுதி  

லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன காசாளரின் மரணம் கொலையே என இரண்டாவது பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன காசாளரின் மரணம் கொலையே: பிரேத பரிசோதனையில் உறுதி  
Published on
Updated on
1 min read

சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன காசாளரின் மரணம் கொலையே என இரண்டாவது பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், உருமாண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவர் தொழிலதிபர் மார்ட்டின் நிறுவன அலுவலகத்தில் காசாளராகப் பணியாற்றி வந்தார். அந்நிறுவனத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வருமானவரி சோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதுதொடர்பாக பழனிசாமியிடமும் விசாரிக்கப்பட்டது. 

அதையடுத்து வீட்டைவிட்டு வெளியே சென்ற பழனிசாமி மே 3 ஆம் தேதி காரமடை பகுதியில் உள்ள குளத்தில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதனையடுத்து அவரது சடலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மே 5 ஆம் தேதி பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. 

அதேசமயம் தனது தந்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பழனிசாமியின் மகன் ரோகின்குமார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் வழக்கை விசாரித்த கோவை மாவட்ட நீதித் துறை நடுவர் (எண் 8), பழனிசாமியின் சடலத்தை மறு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து 3 பேர் அடங்கிய மருத்துவர் குழுவினர், பழனிசாமியின் சடலத்தை மே 28இல் மறு பிரேதப் பரிசோதனை செய்தனர். இதன் முடிவுகள் வரும்வரை பழனிசாமியின் உடலைப் பதப்படுத்தி வைக்க வேண்டும் என்றும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்றும் அவரது மனைவி, மகன்கள் மற்றும் உறவினர்கள் தெரிவித்து வந்தனர். 

எனவே மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜா ரனவீரன் கோவை குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றத்தில் (எண்.8) மனு தாக்கல் செய்திருந்தார். அதில், பழனிசாமியின் சடலத்தை மனைவி, மகன்கள் அல்லது உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.ராமதாஸ், சடலத்தை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் என ஜூன் 4 ஆம் தேதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பழனிசாமியின் சடலத்தை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க போலீஸார் முயற்சி மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் 39 நாள்கள் கழித்து பழனிசாமியின் சடலம் அவரது மனைவியிடம் ஜூன் 5 அன்று ஒப்படைக்கப்பட்டது. 

இந்நிலையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன காசாளரின் மரணம் கொலையே என இரண்டாவது பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பான தகவல் காரணமாக பழனிசாமியின் மர்ம மரணம் இந்த வழக்கில் கேள்விகளை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com