பெரும்பான்மையான மக்களைக் குடிகாரர்களாக மாற்றியிருக்கிற 50 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் தீய ஆட்சி முறைமைகளால் குடிநோயாளிகளின் மாநிலமாக தமிழ்நாடே மாறியிருக்கிறது. மக்களின் நலன் காக்க வேண்டிய மாநில அரசே மதுபானக் கடைகளைத் திறந்து மக்களைக் குடிகாரர்களாக்கி வருகிற பேரவலம் தொடர்ச்சியாக இந்த மண்ணில் நடந்து வருகிறது. மதுவிலக்கு கேட்டு மக்கள் நலன் சார்ந்த அரசியல் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ச்சியாகப் போராடி வருகிறோம். ஆனால், தமிழ்நாடு அரசு இதனைக் கண்டு கொள்ளாமல் தனக்கு வருவாய் வருகிற மிகப்பெரும் வழியாக டாஸ்மாக் மதுபானக் கடைகளை கருதி, ஒரு அறிவானச் சமூகமாக தமிழ்ச் சமூகத்தை உருவாக்கத் தெருவெங்கும் படிப்பகங்களை திறக்காமல் குடி நோயாளிகளை உருவாக்க வீதிதோறும் குடிப்பகங்களைத் திறந்து வைத்து இந்த மண்ணையும், மக்களையும் பாழ்படுத்தி வருகிறது.