தேசியக் கல்விக் கொள்கை வரைவுக்கு எதிராக போராட்டம் தேவையா? விழியன் பதில்

தேசிய கல்விக் கொள்கை பற்றிய உரையாடல்கள் கருத்து கேட்கும் கடைசி நாட்களை நெருங்க நெருங்க லேசாக சூடுபிடித்துள்ளது.
தேசியக் கல்விக் கொள்கை வரைவுக்கு எதிராக போராட்டம் தேவையா? விழியன் பதில்

தேசியக் கல்விக் கொள்கை வரைவு குறித்து சமூக செயற்பாட்டாளரும், குழந்தைகளுக்கான எழுத்தாளராகவும் அறியப்படும் உமாநாத் விழியன் அவர்களின் எளிமையான பதில்கள்..

தேசிய கல்விக் கொள்கை பற்றிய உரையாடல்கள் கருத்து கேட்கும் கடைசி நாட்களை நெருங்க நெருங்க லேசாக சூடுபிடித்துள்ளது. ஆனால் இந்த சூடு ஜூன் முதல் வாரத்திலேயே இருந்திருக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கை ஒட்டிய உரையாடலில் ஒருவர் “வாருங்கள் வீதிக்கு இறங்கி போராடுவோம்” என்றார். உண்மையில் போராட்டம் அவசியமா? என்ன வகையான போராட்டம் அவசியம்?

தேககொ வரைவு வந்திருக்கும் சமயம் கல்வி பற்றிய உரையாடல் துவங்க அற்புதமான சமயம். யாரிடம் தொடங்க? பொதுமக்களிடம் தான். கல்வி எதற்கு? பள்ளிகளில் உள்ள சிக்கல்கள் என்ன? உலக அளவில் கல்வியில் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன? கல்வி நமக்கு வந்த வரலாறு? பல்வேறு படிநிலைகள் என்ன? எப்படி குழந்தைகள் கற்கின்றார்கள்? அவர்களின் உளவியல் என்ன? எங்கே தவறுகின்றார்கள்? கற்றல் குறைபாடுகள் என்ன? எப்படி கையாள்வது? இப்படி இன்னும் ஏராளமான விஷயங்களைப் பற்றி உரையாட இந்த தேககொ ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தியுள்ளது.

தேககொ ஒரு பாதகமா? இதன் கூறுகளை எப்படி ஆராய்வது? யாரிடம் பேசவேண்டும்? யார் பேசவேண்டும்.

இந்த கொள்கையை படித்து புரிந்து கொள்வது ஆசிரிய சமூகத்தால் மட்டுமே இயலும். குழந்தைகளுடனும் வகுப்பறைகளுடன் பெரும் நேரம் செலவழிக்கும் அவர்களால் மட்டுமே இது இயலும். கல்வியாளர்கள் அவர்களுக்கு உதவக்கூடும்.

படித்து?
படித்து முதலில் தங்களுக்குள் உரையாடல் நிகழ்த்துதல் அவசியம். ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் புரிதல்களை பகிர்தல் அவசியம். அதற்கான புதிய மேடைகளை அமைத்து வடிவமைத்து கொள்வது அவசியம். தொழில்நுட்பத்தினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

பின்னர்?
அவர்கள் நிச்சயம் பொதுமக்களை நோக்கிச்செல்லவேண்டும். ஆம், பெற்றோர்களிடம் கல்வி பற்றிய உரையாடல்களை நிகழ்த்துவதே மிகவும் சரியான திசை. எந்த கொள்கை எந்த மாற்றம் வந்தாலும் அதனை எதிர்கொள்ளப்போவது கடைசியில் பெற்றோர்கள் தான். அவர்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்திவிட்டால் பின்னர் அவர்கள் தேவையா தேவையில்லையா என கவனித்துக்கொள்வார்கள்.

அரசியல் இயக்கங்களும் கட்சிகளும்:

இதில் அரசியல் இயக்கங்களுக்கும் கட்சிக்கும் நிறைய பணி உள்ளது. இவர்கள் இதனை கையில் எடுத்தால் ஒழிய பெருவாரியான கவனம் கிடைக்காது. அவர்கள் கட்சி அளவில் இதனை ஆராய்ந்து, மாவட்ட அளவில், கிராம / நகர அளவில் இதனைப் பற்றிய பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். மக்களை நோக்கி அவர்கள் நகர வேண்டும். கவன ஈர்ப்பு போராட்டங்கள் மக்களை என்ன இதில் இருக்கின்றது என்று உள்ளே இழுக்க வேண்டுமே ஒழிய பயந்து நகரச் செய்துவிடக்கூடாது. அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் இதில் உள்ள அரசியல் சிக்கல்களை, கட்டமைப்பு சிக்கல்களை விவாதித்தல் அவசியமாகின்றது.

உண்மையில் பேசப் பேச தானாகவே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதற்கான பாதை அமையும். முதல் பேசவும் உரையாடவும் வேண்டும்.

இந்த அடிப்படை கட்டமைப்பினை செய்துவிட்டால் எதனையும் எதிர்கொள்ளலாம். எந்த மாற்றமும் மக்களின் முழு இசைவுடன் நடக்கும் என்ற நிலையினை அடையலாம்.

போராட்டங்களின் வடிவங்களையும் முறைகளையும் மாற்ற வேண்டிய காலமிது.

- விழியன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com