வானூர்திகளில் தமிழ்; தமிழர்கள் விடுதலை: மோடி அறிவிப்புக்கு ராமதாஸ் நன்றி

வானூர்திகளில் தமிழ் மற்றும் தமிழர்கள் விடுதலை தொடர்பான பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புகளுக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
வானூர்திகளில் தமிழ்; தமிழர்கள் விடுதலை: மோடி அறிவிப்புக்கு ராமதாஸ் நன்றி

சென்னை: வானூர்திகளில் தமிழ் மற்றும் தமிழர்கள் விடுதலை தொடர்பான பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புகளுக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சென்னையை அடுத்த வண்டலூர் கிளாம்பாக்கத்தில் இன்று மாலை நடைபெற்ற அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, தமிழ் மொழி குறித்தும், தமிழர்கள் நலன் குறித்தும் வெளியிட்ட அறிவிப்புகள் மிகுந்த மகிழ்ச்சியும், மனநிறைவும் அளிக்கின்றன.

தமிழ்நாட்டுக்கு வந்து செல்லும் விமானங்களில் இனி தமிழ் மொழியில் அறிவிப்புகள் வெளியிடப்படும்  என்று பிரதமர் அறிவித்தார். இதை தமிழுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு விமானங்களில் பயணம் மேற்கொள்வோரில் குறிப்பிட்டத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் தமிழ் மொழி மட்டுமே தெரிந்த தொழிலாளர்கள் ஆவர். அவர்களுக்கு இந்த நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக அமையும். அத்துடன் தமிழ் மொழி உலகில் பயன்பாட்டில் இருக்கும் மிக மூத்த செம்மொழி என்று புகழ்ந்ததன் மூலம் தாய்தமிழ் மொழியின் சிறப்புகள் மற்றும் பெருமைகளை பிரதமர் அங்கீகரித்திருக்கிறார். இது தமிழர்கள் பெருமிதப்பட வேண்டிய ஒன்றாகும்.

சவுதி அரேபிய சிறைகளில் வாழும் 800 தமிழர்களை விடுதலை செய்வதற்காக அந்த நாட்டு இளவரசருடன் பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் நல்ல முடிவு ஏற்படும் என்றும் பிரதமர் அறிவித்திருக்கிறார். இது சம்பந்தப்பட்ட தமிழர்களின் குடும்பத்தினரிடையே மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும். இது தவிர தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்திற்கு  எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. தமிழகத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்காகவும் மேலும் பல்வேறு அறிவிப்புகளையும் பிரதமர் வெளியிட்டுள்ளார். அவை அனைத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்று பாராட்டுகிறது. தமிழகம் பயனடையும் வகையில் இந்த அறிவிப்புகளை வெளியிட்டதற்கு நன்றி தெரிவிக்கிறது.

அதேபோல், தமிழை தேசிய ஆட்சி மொழியாக்க வேண்டும் - 7 தமிழர்கள் விடுதலை உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த 10 கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com