ஆளும் அதிமுகவின் உயர்மட்ட பிரமுகரின் குடும்ப உறுப்பினர் பெயர் இதில் அடிபடுகிறது. தமிழகத்தில் அனுதினமும் நடக்கும் பாலியல் வன்கொடுமை கொடூரங்களைக் கண்டு கொள்ளாத அதிமுக, திடீரென பொள்ளாச்சி பிரச்னையில் மட்டும் தன் நாடாளுமன்ற உறுப்பினரை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வற்புறுத்தியுள்ளது ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. புகார் கொடுத்த பெண்ணின் சகோதரனைத் தாக்கிய அதிமுக உள்ளூர் முக்கியஸ்தர் பார் நாகராஜன் மீது அப்போதே நடவடிக்கை எடுக்காமல், வெகுஜன நிர்ப்பந்தம் அதிகமான பிறகு, இப்போது கட்சியை விட்டு நீக்கியிருப்பதும் கேள்விகளை உருவாக்குகிறது. நாகராஜன் மீது வெறும் அடிதடி வழக்கு பதிவு செய்து, ஸ்தல காவல்துறை திட்டமிட்டு உண்மைகளை மறைக்கிறது என்று அறிய முடிகிறது. குற்றவியல் சட்டப் பிரிவு 161ன் படி, பாலியல் குற்றங்களை ஒரு பெண் போலீஸ் அதிகாரி தான் விசாரிக்க வேண்டும், ஆனால் ஆண் அதிகாரி விசாரித்ததாகவே தகவல் கிடைக்கிறது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஊடக சந்திப்பு நடத்தி, மொபைல் போன்களில் குற்றச்செயல்களின் பதிவு இல்லை, அரசியல் பிரமுகர்கள் ஈடுபாடு இல்லை என்று கூறுவதும், அமைச்சர், அதிமுக உயர்மட்ட பிரமுகர் மீது குற்றம் சாட்டும் வலைத்தளவாசிகள் மீது சைபர் குற்றப் பிரிவு மூலம் அவசர அவசரமாக நடவடிக்கை எடுப்பதும் கூட பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. அருப்புக்கோட்டை நிர்மலா தேவி வழக்கைப் போலவே, உயர்மட்ட குற்றவாளிகளை விட்டு விட்டு, கிடைத்தவர்களை மட்டும் சிக்க வைப்பது என்ற நிலைமை இதிலும் தெரிகிறது. இதுவரை 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.